Published : 24 Dec 2022 08:30 PM
Last Updated : 24 Dec 2022 08:30 PM
திருமணமான பெண்ணுக்கு தேவையான மூன்று விஷயங்கள் எவை? இவைதான் ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படத்தின் அடிநாதம். ஒரு ஊரில் பண்ணையாராக இருக்கும் வில்லன், அந்த ஊருக்கும் புதிதாக வரும் ஹீரோவை துன்புறுத்துவார். பொறுத்துப் பொறுத்து பார்க்கும் ஹீரோ பொங்கி எழுந்தால் என்ன கொட்டாவி வருகிறதா... அதே கதையை குடும்பத்தினுள் புகுத்தி நகைச்சுவைத் தெறிக்க எடுத்து அனைவரையும் ரசிக்க வைத்தால் “ஜெய ஜெய ஜெய ஜெய ஹே”.
கோழிப் பண்ணை உரிமையாளரான கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்ட ராஜேஷுக்கும் (பாசில் ஜோசப்), கல்லூரி படிப்பை பாதியில் கட்டாயமாக நிறுத்தப்பட்ட பெண்ணான ஜெயாவுக்கும் (தர்ஷனா ராஜேந்திரன்) குடும்பத்தினரால் திருமணம் நிச்சயித்து நடக்கிறது. கடும் கோபக்காரன் என பெருமையாக தாயால் வர்ணிக்கப்படும் ராஜேஷ், ஒரு சுபமுகூர்த்த நாளில் கோபத்தில் ஜெயாவை அறையத் தொடங்குகிறான். அதையடுத்து சமாதானப்படுத்த திரைப்படத்துக்கும் ஹோட்டலுக்கும் அழைத்து செல்கிறான். அறைவதும், திரைப்படத்துக்கும் ஹோட்டலுக்கும் செல்வதும் வழக்கமாகிறது.
ஒரு நாள் பொங்கி எழும் ஜெயா, ராஜேஷுக்கு பதிலடிக் கொடுக்க தொடங்குகிறது கதையின் சுவாரஸ்யம். தொடர்ந்து அடிக்கும் ஆணை, பெண் திருப்பியடித்தால் என்னவாகும் என்பதே கதை. ஆனால் அதை அழுவாச்சியாக இல்லாமல் பார்க்கும் அனைவருக்கும் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது இந்தப் படத்தின் திரைக்கதை.
கணவனின் அடியை தாங்க முடியாமல் அப்பாவுக்கு ஜெயா அழுகையுடன் போன் செய்யும்போது போண்டா சாப்பிட்டப்படி அசட்டையாக இதெல்லாம் சகஜம் என்று கூறியபடி டீயை ஆர்டர் செய்யும் காட்சித் தொடங்கி , ஜெயா கணவனை அடித்தவுடன் பொங்கி எழும் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவருமே நிஜத்தை படம் பார்ப்பவர்களின் முகத்துக்கு நேராக கொண்டு வந்து விடுகிறார்கள்.
மலையாளத்தில் வந்த இப்படத்துக்கு மொழியே தேவையில்லை. காட்சிகளே போதும். தற்போது தமிழிலும் ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளதால் ரசித்துப் பார்க்கலாம். பொருளாதாரமே பெண்ணுக்கு முக்கிய பலம் எக்காலத்துக்கும் என்பதே படத்தின் அடிநாதம். திருமணமான பெண்ணுக்கு தேவையான மூன்று விஷயங்கள் எது? என ராஜேஷை பார்த்து நீதிபதி எழுப்பும் கேள்வி அனைத்து ஆண்களுக்கும் ஆனது.
மூச்சு முட்ட அழுக வைக்க வேண்டிய கதையை களமாக எடுத்துக்கொண்டு சிந்திக்க வைப்பதுடன் சிரிக்க வைத்திருப்பது இப்படத்தை பார்க்க தூண்டும் முக்கிய அம்சம். நீண்ட காலத்துக்குப் பிறகு நல்ல நேர்மறை எண்ணத்தை அனைவருக்கும் விதைத்திருப்பது இப்படத்தின் பிளஸ். தற்போது ஒடிடியில் சாப்பிட்டுக் கொண்டே இந்த படத்தைப் பார்த்தாலும் சிரிப்பால் புரை ஏறுவது நிச்சயம்.
இயக்குநர் விபின் தாஸ், நஷித் முகமது ஃபாமியுடன் இணைந்து இப்படத்தை எழுதியுள்ளார். இப்படத்தின் ஹீரோ பாசில் ஜோசப், அவர் இயக்கிய மின்னல் முரளி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர். பெண்ணால் தனியாக வாழ முடியும் ஆண்களால் முடியுமா? என்று நண்பர்களிடம் அவர் பேசும் ஒரு காட்சியே போதும். நாயகி தர்ஷனா ஹிருதயம் படத்தின் மூலம் நன்கறியப்பட்டவர்.
வேலை செய்யும் என்னால் எல்லோரிடமும் பேச முடிந்த போது கணவனால் மட்டும் ஐந்து நிமிடம் கூட மனைவியிடம் பேச முடியாதது ஏன்? என்ற கேள்வி படம் பார்க்கும் பலரையும் யோசிக்க வைக்கிறது. அன்பு என்ற பெயரால் திருமண பந்தத்தில் பெண்ணுக்கு மறுக்கப்படும் பல விஷயங்களை ஆண் கண்ணுக்கும், குடும்பத்தினருக்கும் தெரியும்படி காட்டியிருக்கும் பூதக்கண்ணாடி தான் இப்படம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT