Published : 22 Sep 2022 05:33 PM
Last Updated : 22 Sep 2022 05:33 PM
'தெலங்கானாவைச் சேர்ந்த எந்த ஒரு பிஜேபி ஜோக்கருக்கும் நம்முடையை உரிமையைக் கோரும் தைரியம் இல்லை' என தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமாராவ் விமர்சித்துள்ளார். ஆஸ்கருக்கு ‘ஆர்ஆர்ஆர்’ பரிந்துரைக்கப்படாததை முன்வைத்தே அவர் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள 95-வது ஆஸ்கர் விருதுக்கு, சிறந்த வெளிநாட்டு மொழி படத்துக்கான பிரிவுக்கு இந்தியா சார்பில் குஜராத்தி படமான 'செலோ சோ ' (chhelloshow) பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ராஜமௌலியின் 'ஆர்ஆர்ஆர்' படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படும் என ரசிகர்களில் ஒரு தரப்பினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையில், ரசிகர்கள் மட்டுமல்லாமல், அரசியல்வாதிகளும், திரைவர்த்தகர்களும் தங்களின் ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகனும், அம்மாநில அமைச்சருமான கே.டி.ராமா ராவ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''தெலங்கானாவைச் சேர்ந்த எந்த ஒரு பிஜேபி ஜோக்கருக்கும் நம்முடையை உரிமையைக் கோரும் தைரியம் இல்லை. குஜராத்தி முதலாளிகளின் செருப்பை சுமக்க அவர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்களே தவிர, தெலங்கானாவின் உரிமையை கோரும் தைரியம் அவர்களுக்கு இல்லை. மோடி வெர்ஸின் மையப்பகுதி குஜராத்'' என பதிவிட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல் பல முறை குஜராத்துக்கு ஆதராவாகவே மத்திய அரசு செயல்படுவதாக கே.டி.ஆர் குற்றம்சாட்டியிருக்கிறார்.
அரசியல் விமர்சகர் கே.நாகேஸ்வர ராவ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் குஜராத்தி திரைப்படமான 'செலோ சோ ' நமது 'ஆர்ஆர்ஆர்' தோற்றுவிட்டது. நமது காசிப்பேட்டை கோச் தொழிற்சாலை மறுக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் இன்ஜின் தொழிற்சாலையை பெறப்போகிறது. குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் உலக சுகாதார மையம் அமைக்க உள்ளதன் மூலம் அந்த வாய்ப்பை இழந்தது நமது ஹைதராபாத்'' என பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT