Published : 11 Oct 2016 10:51 AM
Last Updated : 11 Oct 2016 10:51 AM
'வேதாளம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நாயகனாக நடிக்க 'ஜில்லா' நேசன் இயக்கவிருக்கிறார்.
அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், வித்யூலேகா உள்ளிட்ட பலர் நடித்த 'வேதாளம்' படத்தை இயக்கினார் சிவா. அனிருத் இசையமைத்த இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்தார். 2015ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இப்படம் பெரும் வசூல் சாதனை படைத்தது.
இப்படத்தின் ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. இப்படத்தின் உரிமைகள் யாருக்கும் அளிக்காமல் ஏ.எம்.ரத்னம் வைத்திருந்தார்.
தெலுங்கில் முன்னணி நாயகனாக வலம் வரும் பவன் கல்யாண் - ஏ.எம்.ரத்னம் இருவரும் ஒரு படத்தில் இணைய பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இப்படம் 'வேதாளம்' ரீமேக்காக இருக்க வாய்ப்புகள் அதிகம் என தகவல்கள் வெளியாகின.
இன்று (அக்டோபர் 11) பவன் கல்யாண் - ஏ.எம்.ரத்னம் இணையும் படத்தின் பூஜை நடைபெற்றது. 'வேதாளம்' படத்தை தெலுங்கு திரையுலகுக்கு ஏற்றவாறும், பவன் கல்யாணுக்கு பொருந்துவது போன்றும் மாற்றி இயக்க இருக்கிறார் நேசன். இவர் விஜய் நடித்த 'ஜில்லா' படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர்.
இன்று தான் பூஜை போடப்பட்டு இருப்பதால், இதர நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் ஒப்பந்தம் செய்யப்படுவார்கள் என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT