Published : 27 May 2022 08:01 PM
Last Updated : 27 May 2022 08:01 PM
கேளர அரசின் சிறந்த நடிகைக்கான விருது, நடிகை ரேவதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசின் 52ஆவது மாநிலத் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருது வென்றவர்களின் பட்டியலைத் திரைத் துறை அமைச்சர் சஜி செரியன், இன்று திருவனந்தபுரத்தில் வெளியிட்டார்.
அதன்படி சிறந்த நடிகைக்கான விருது தமிழ்/மலையாள நடிகை ரேவதிக்கு (பூதகாலம்) அறிவிக்கப்பட்டுள்ளது. பல மலையாளப் படங்களில் நடித்து ஒருகாலத்தில் முன்னணி மலையாள நடிகையாக இருந்தாலும் ரேவதிக்கு வழங்கப்படும் முதல் கேரள அரசு விருது இதுதான். சிறந்த நடிகருக்கான விருது, பிஜூ மேனன் (ஆர்க்கறியாம்), ஜோஜூ ஜார்ஜ் (நாயாட்டு, ஃப்ரீடம் ஃபைட், மதுரம்) ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்தப் போட்டியில் இந்திரன்ஸ் கடைசிச் சுற்று வரை இருந்தார் எனச் சொல்லப்படுகிறது.
‘ஆவாஸவ்யூகம்’ என்னும் படம் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
கிருஷாந்த் ஆ.கே. இயக்கிய இந்தப் படம் மனிதன் - இயற்கை உறவைப் பேசுகிறது. சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதையும் இந்தப் படத்துக்காக கிருஷாந்த் பெறுகிறார்.
சிறந்த வெகுஜனப் படமாக வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் பிரனவ் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த ‘ஹ்ருதயம்’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஹெஷாம் அப்துல் வஹாப் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதைப் பெறுகிறார்.
சிறந்த இயக்குநருக்கான விருது ‘ஜோஜி’ படத்துக்காக இயக்குநர் திலீஷ் போத்தனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனாக் காலத்தில் ஓடிடியில் வெளிவந்து மிகப் பெரும் கவனம் பெற்ற படம் இது. ஃப்கத் பாசில் முதன்மைக் கதாபாத்திரம் ஏற்றிருந்தார். இந்தப் படத்துக்காகச் சிறந்த திரைக்கதை (Adopted) ஆசிரியருக்கான விருதை ஷ்யாம் புஷ்கரன் பெறுகிறார். சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் (ஜஸ்டின் வர்கீஸ்) இந்தப் படம் தட்டிச் சென்றுள்ளது.
லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில் வெளிவந்த ‘சுருளி’ படத்தின் ஒளிப்பதிவாளர் மது நீலகண்டனுக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த கதைக்கான விருது ‘நாயாட்டு’ கதையாசிரியர் ஷாகி கபீருக்கு வழங்கப்படுகிறது.
இரண்டாவது சிறந்த படம் என்ற விருது, சவிட்டு, நிஷத்தோ ஆகிய இரு படங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது ‘கள’ படத்தில் நடித்த சுமேஷ் மூருக்கு அளிக்கப்படுகிறது. சிறந்த குணச்சித்திர நடிகையாக உண்ணி மாயா (ஜோஜி) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT