Published : 07 May 2022 10:37 PM
Last Updated : 07 May 2022 10:37 PM
பொதுவாக ரீமேக் செய்யப்படும் படங்கள் அப்படியே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மாறாக, சம்பந்தப்பட்ட படத்தின் உணர்வை பிசகாமல் மண்ணுக்கேற்ப கடத்தினாலே போதுமானது. அதுவே, அந்தப் படத்தை ரீமேக் செய்ததற்கான நியாயத்தை சேர்த்துவிடும். ஆனால், சமீபத்திய ரீமேக் படங்கள் சோதனையின் உச்சமாகவே திகழ்கின்றன.
உதாரணமாக 'ஆண்டாய்டு குஞ்சப்பன்' படத்தின் ரீமேக்கான 'கூகுள் குட்டப்பா' படத்தை எடுத்துக்கொள்வோம். 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' படத்தில், சுராஜ் வெஞ்சரமூடு கதாபாத்திரம் இறுக்கமான, பெரிய அளவில் உணர்ச்சிகளை வெளிக்காட்டாத பாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். காரணம், ஒரு மெஷினான ரோபோவின் வருகை அந்த இறுக்கத்தை எப்படி தளர்த்துகிறது என்ற உணர்வை பார்வையாளனுக்கு கடத்தவும், அந்த மாற்றத்தின் வேறுபாடுகளை காட்டவும் கச்சிதமாக எழுதப்பட்டிருக்கும்.
தவிர, மகன் தனது பேச்சை மீறி வெளிநாடுக்கு செல்வதை, முக பாவனைகளாலும், மௌனத்தாலும் தனது அதிருப்தியை வெளிப்படுத்திருப்பார் சுராஜ். சொல்லப்போனால் அந்த படத்துக்கான ஜீவனே சுராஜ் கதாபாத்திரம்தான். அதைச் சுற்றி நிகழும் கதைக்கான உயிரை அந்தக் கதாபாத்திரம் கொடுப்பதால் அதை எழுப்பட்டிருக்கும் விதத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருக்கும்.
ஆனால், 'கூகுள் குட்டப்பா'வை எடுத்துக்கொண்டால், சுராஜ் கதாபாத்திரத்தை ஏற்று தமிழில் நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் மெனக்கெட்டிருக்கிறார் என்ற போதிலும், உணர்வுகளை கடத்த தவறியிருக்கிறார். தமிழில் இருக்கும் சிக்கல், தந்தை - மகனுக்கு இடையில் மௌனத்தை ஈட்டு நிரப்ப வேண்டிய இடங்களை வசனங்கள் கவ்விக்கொண்டு அகல மறுக்கின்றன. ஆயிரம் வார்த்தைகளைக்காட்டிலும், ஒரு சில நிமிட மௌனத்திற்கு வலிமை அதிகம். காட்சி மொழிக்கு அது மிகவும் முக்கியம்.
அப்படிப்பார்க்கும்போது கே.எஸ்.ரவிக்குமாரிடம் இருக்கும் அந்த தனிமையையும், மகன் மீதான அதிருப்தியையும் பார்வையாளனுக்கு கடத்த முடியவில்லை. 'உன் விருப்பப்படி பண்ணு..' என தொடங்கி பேசும் வசனத்துக்கும், முகத்தைக்கூட திருப்பாமல், 'ம்ம்..' என முடிக்கும் சொல்லுக்கு இடையிலான வித்தியாசம்தான். ஆண்ட்ராய்டு குஞ்சப்பனுக்கும் கூகுள் குட்டப்பாவுக்குமான இடைவெளி.
'விக்ருதி' மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கான, 'பயணிகள் கவனிக்கவும்' படத்தில் கதையைக் கடந்து நிற்பது 'விதார்த்' தின் நடிப்பு. அவர் மலையாளத்தில் சுராஜ் வெஞ்சரமூடுவின் நடிப்பை அப்படியே வாரி இறைத்துக்கொள்ளவில்லை. மாறாக, தனக்கான தனி பாணியை படத்தில் பின்பற்றியிருப்பார். மலையாளத்தில் சுராஜ் கதாபாத்திரம் செய்யாத புது யுக்தியை கையாண்டு அந்த கதாபாத்திரத்தை மெருகேற்றியிருப்பார். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் எழுப்பும் ஒலியை எழுப்பி நடிப்பில் தனக்கான தனி முத்திரையை பதித்து, அந்தக் கதாபாத்திரத்துக்கு உயிரூட்டியிருப்பார் விதார்த்.
அதுதான் தேவையும் கூட. மொழிமாற்றம் மட்டும் செய்து, படத்தை அப்படியே அச்சுவார்ப்பதற்கு பதிலாக, கதாபாத்திரம் கடத்தும் உணர்வை மெருகேற்றுவது தான் ரீமேக்குக்கான உரிய நியாயத்தை சேர்க்கும். அந்த வகையில் விதார்த் கதாபாத்திரம் பாராட்டு பெற்றாலும், சோபின் சாஹிர் கதாபாத்திரத்தை தமிழ் ஏற்று நடித்திருக்கும் கருணாகரன் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என தோன்ற வைத்தது. விதார்த் நடிப்பு படத்துக்கு பலம் சேர்த்ததால் 'பயணிகள் கவனிக்கவும்' 'விக்ருதி' ரீமேக்கை ஏமாற்றவில்லை.
ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் வெளியான 'ஜோசப்' படம், 'விசித்திரன்' ஆக ரீமேக்காகியிருக்கிறது. மலையாள வெர்ஷனை இயக்கிய ஜி.பத்மகுமாரே இதற்கும் இயக்குநர் என்பதால் மூலக்கதையை சிதைக்காமல் அப்படியே தமிழுக்கு எடுத்துவந்திருக்கிறார். இந்தப் படத்தில் யதார்த்தத்திற்காக வலிந்து திணிக்கப்பட்ட நடிப்பை நடிகர்கள் ஏற்றுக்கொள்வதால், செயற்கைத்தனத்தை படம் நெடுங்கிலும் காணமுடிகிறது. கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ஹாரர் காமெடி படமான 'ஆதி கப்யரே கூடமணி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ஹாஸ்டல் படத்தில் 'அடல்ட்' காமெடி என்ற பெயரில் முகச்சுளிப்புகளை படம் பரிசாக தந்தது.
இப்படி மோசமான அணுகுமுறையால்தான் கேரளாவில் கொண்டாடப்பட்ட மலையாள படைப்புகளின் தமிழ் ரீமேக் கழுவியூற்றப்படுகின்றனர். இந்நிலை இனியாவது மாறுமா என காத்திருப்போம்.
> இது, 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT