Last Updated : 07 May, 2016 05:06 PM

 

Published : 07 May 2016 05:06 PM
Last Updated : 07 May 2016 05:06 PM

ஃபான்றி தந்த கோபத்தை விட சைராட் தரும் வெறுப்பு அதிகமாக இருக்கும்: இயக்குநர் நாகராஜ் சிறப்புப் பேட்டி

'சைராட்' படத்தில் காதல் பின்னணியில் சாதியையும், பாலினப் பாகுபாட்டையும் பட்டவர்த்தனமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறார் படத்தின் இயக்குநர் நாகராஜ் மஞ்சுளே.

தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியின் முழு வடிவம்

காதலும் சாதியும் உங்கள் திரைப்படங்களில் வற்றாமல் இருப்பது ஏன்?

காதலுக்கு கண் இல்லை என்பது வார்த்தையில் மட்டுமே. காதல் வந்தவுடன் சாதியும் உள்ளே நுழைந்துவிடுகிறது. இந்தியாவில் சாதி இல்லாமல் காதலுக்கான சாத்தியம் மிகக் குறைவு. சாதிதான் நம் சமூகத்தின் அடித்தளமாக இருக்கிறது. இந்த நிதர்சனத்தைத் தவிர்க்க வேண்டுமானாலும் உங்களுக்கு பிரத்யேகமான ஓர் அறிவுஜீவித்தனம் தேவை. அது எனக்கு இல்லை. எனவே எனது திரைப்படங்களில் ஒரே ஒரு வித்தியாசத்தை மட்டுமே பார்க்க முடியும். பாலிவுட் படங்களில் காதல் கையாளப்படும் விதமும் எனது படத்தில் காதல் பெறும் இடமுமே அது.

சைராட் படத்தில் வழக்கமான பாலின அடையாளங்களை உடைத்தெறிந்துள்ளீர்கள். கதாநாயகி அர்ச்சி முக்கிய வேடம் தரித்துள்ளார். கேமரா கோணங்கள் அவரையே சுற்றி வருகின்றன. கதாநாயகர் பர்ஸ்யா காதல் மெல்லிசைகளை பாடுகிறார்?

'சைராட்' முழுக்க முழுக்க அர்ச்சியின் கதை. கதாநாயகனுக்கு இரண்டாம் இடமே. ஆண்களால் உருவாக்கப்பட்டு, சிதைக்கப்பட்ட இந்த உலகம் என்னை சளைப்படையச் செய்கிறது. இத்தருணத்தில் ஒரு பெண் இந்த உலகை சமைக்க வேண்டும் என விரும்புகிறேன். அவள் அதை சீரழித்தாலும் பரவாயில்லை. அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் ஒவ்வொரு பெண்ணும் தலித்தே. உயர் சாதியிலும்கூட பெண்ணுக்கு இரண்டாம் இடமே. ஒரு தலித் ஆணும் உயர் சாதிப் பெண்ணை இளக்காரமாக பார்க்க முடியும். இத்தனைக்கும், இந்த உலகில் சரி சமமான எண்ணிக்கையில் பெண்கள் இருக்கின்றனர். பெண்கள் மீதான பாகுபாட்டை நாம் இன்னும் உணரவில்லை. அதனால்தான் இந்து - முஸ்லிம், உயர் சாதி - தாழ்ந்த சாதி என்ற அளவிலேயே நாம் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். பாலின பாகுபாடுதான் நமக்கு எதிரான உண்மையான போட்டி. சில நேரங்களில் நான் என் மீதே எனக்கு வெறுப்பு ஏற்படுகிறது. நான் மாற விரும்புகிறேன். ஏனெனில் என்னை அறியாமல் எனக்குள் இருக்கும் ஆணாதிக்கம் சில நேரங்களில் மேலோங்கிவிடுகிறது. ஒரு ஆண் என்பதாலேயே இச்சமூகம் என்னை மேன்மையானவனாக கருதுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த ஆணாதிக்க உலகில் இருந்து விடுபட வேண்டும் என விரும்புகிறேன்.

காதல் மாற்றத்துக்கு வித்திடும் அத்தனை வலுவான சக்தியா?

நிச்சயமாக. காதல் மட்டுமே நம் மத்தியில் இருக்கும் ஒரு நம்பிக்கை கீற்று. நம்மை கட்டுகளில் இருந்து விடுவிக்கும். இதை நானாக சொல்லவில்லை. ஒவ்வொரு கவிஞரும், புனிதரும், இலக்கியவாதியும் இதையே கூறியிருக்கின்றனர். மராட்டிய கவிஞர் குஷ்மகராஜ், "காதல் மட்டும் இந்த உலகை அழகான புகலிடமாக மாற்றும் ஒற்றை நம்பிக்கை" எனக் கூறியிருக்கிறார்.

வழக்கமான காதல் கதைகளில் இருக்கும் பிரபலமான உருவகங்கள் இந்தப் படத்திலும் இருக்கின்றன கல்லூரி வளாகம், நண்பர்கள் என எல்லாம் இருக்கின்றன. ஆனால், அவற்றை நீங்கள் கேள்விக்குரியதாக ஆக்கியிருக்கிறீர்கள். அவற்றின் அர்த்தத்தை தலைகீழாக படைத்துள்ளீர்கள். இந்தப் படத்தில் என்னை மிகவும் கவர்ந்த அம்சமே இதுதான்.

இதை நான் எளிதாக்க விரும்புகிறேன். இயல்பானதை மட்டுமே நான் படமாக்கியுள்ளேன். பாலிவுட் இயல்பானவற்றை மிகைப்படுத்தி ஒருவித மாயத்தோற்றத்தை உருவாக்கியிருக்கின்றன. இப்படி மிகைப்படுத்தப்பட்ட விஷயங்கள் மலிந்துவிட்டதால், நம் மத்தியில் யாராவது உண்மை பேசினால் நாம் ஆச்சரியத்தில் ஆழ்ந்து விடுகிறோம். நான் நிறைய பாலிவுட் படங்களைப் பார்க்கிறேன். ஆனால், அது என் மீது தாக்கத்தை ஏற்படுத்துவது இல்லை. ஷாருக்கான் மாதிரி நடு ரோட்டில் கைகளை திறந்து கொண்டு நின்றேன் என்றால் அடி வாங்குவேன். ஆனால், இப்போது மகாராஷ்டிராவாசிகள் 'சைராட்' படத்தில் தங்களையே பார்ப்பதாக சொல்கின்றனர்.

ஆனாலும் ஏன் பாடலும், நடனமும் உங்கள் படங்களில் இருக்கின்றன. அதுவும் ஹிட் அம்சமாக?

ஆம் நான் என் படங்களில் பாடல்களை பயன்படுத்துகிறேன். ஆனால், அவை கதைக்கு பின்புலமாகவே இருக்கின்றன. கதாபாத்திரங்களின் உள் உணர்வுகளின் சாட்சியாக உலவுகின்றன. எனது இசையமைப்பாளர்கள் அஜய்-அதுல் கதாபாத்திரங்களையும், கதையையும் உள்வாங்கிக் கொண்டு இசையமைத்துள்ளனர். அவர்களது இசை மேற்கத்திய சிம்பொனி வகையறாவாக இருந்தாலும் பாடல் வரிகள் சாதாராணமானவை.

என் படங்களில் உரையாடலும், பாடல்களும் ஒரே மொழியில்தான் இருக்கின்றன. ஆனால், பெரும்பாலான படங்களில் பாடல் காட்சிகளின்போது மட்டும் கதாபாத்திரங்கள் கவிஞர்களாகிவிடுகின்றன.

உங்கள் படங்களுக்கு என்று ஒரு வரையறுக்கப்பட்ட அமைப்பு இருப்பது போல் தோன்றுகிறது. முதல் பாதியில் காதலின் சுவாரஸ்யமும், இரண்டாம் பாதியில் சோகத்தின் தாக்கமும் இருக்கின்றன.

இந்திய சினிமாக்களில் இடைவேளை என்ற முறை இருப்பதை மிகவும் குழந்தைத்தனமான ஒரு கட்டமைப்பாக காண்கிறேன். இடைவேளை என்ற ஓர் கட்டமைப்பு இல்லாவிட்டால் படங்களை எப்படி நீங்கள் இரண்டாக பிரிப்பீர்கள் எனச் சொல்லுங்கள்? கதை எழுதும்போது இது இடைவெளிக்கு முன்னர் இடைவேளைக்குப் பின்னர் என நான் பிரித்தெழுதுவதில்லை. இடைவேளை மட்டுமே ஒரு படத்தின் வீரியத்தன்மையை நிர்ணயிக்க முடியாது. படத்தின் வீரியம் கதைக்குள்ளேயே இருக்கிறது.

'சைராட்' காதல் கதை எதை நோக்கிச் செல்கிறது என்பது பார்வையாளர்களுக்கு நன்றாகத் தெரிகிறது. இருந்தாலும் முடிவு ஒரு பேரதிர்ச்சியாக இருக்கிறது. ஃபான்றி உண்டாக்கிய கோபத்தைவிட 'சைராட்' படத்தில் வேறொன்று இருக்கிறது. துயரமும், வெறுப்பும் ஒருசேர சம அளவில் மேலோங்குகின்றன.

அடிப்படையில் 'சைராட்' ஆழமான சோக படைப்பு. அதை ஒவ்வொருவரும் வெவ்வேறு விதத்தில் உணர்ந்து கொள்கின்றனர். சிலரை கடும் கோபமும் மற்றும் சிலரை மவுனமும் ஆளுமை செய்கிறது. இந்தப் படத்தின் முடிவில் பார்வையாளர்கள் அமைதியாக மட்டுமே இருக்க வேண்டும் என விரும்பினேன். அன்றாடம் செய்தித்தாள்களில் நாம் துயரச் சம்பவங்களைப் படிக்கிறோம். ஆனாலும், அவை நம் உணர்வுகளை லேசாகக் கூட அசைப்பதில்லை. எனவே, 'சைராட்' முடிவில் மக்கள் மவுனமாகி தங்கள் சொந்தத் துயரங்களை அசை போட வேண்டும் என விரும்பினேன். ஜிங்கத் பாடலுக்கு நடனமாடியவர்கள் படத்தின் முடிவில் சிந்தனையாளர்களாக மாறுகிறார்களா என்று பார்க்க விரும்பினேன்.

படத்தில் ஒரு கிரிக்கெட் கமென்டேட்டராக தோன்றுகிறீர்கள். அப்போது நீங்கள் பேசுவதெல்லாம் இச்சமூகத்தின் மீதான கிண்டலா? சமூகத்தை விமர்சிப்பது ஒரி திரைப்பட இயக்குநரின் பணியா?

சமூகத்தை மட்டுமல்ல என்னை நானே பார்த்து சிரிக்கிறேன். தன்னை தானே பார்த்து சிரிப்பது நல்லது. எனக்கு சினிமா எடுப்பது பிடிக்கும்.

அதில் மெனக்கிட்டு நான் எதுவும் செய்வதில்லை. ஒரு குறிப்பிட்ட மொழியை நான் பேசுகிறேன். அவ்வளவே. அதில் இலக்கணப் பிழையைப் பற்றி எனக்கு கவலையில்லை. சச்சின் கிரிக்கெட் விளையாடுகிறார். அதில் மனநிறைவு என்பதற்காக விளையாடுகிறாரே தவிர மற்றவர்கள் அந்த விளையாட்டை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக விளையாடுவதில்லை.

தமிழில்:பாரதி ஆனந்த்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x