Last Updated : 25 Mar, 2022 04:12 PM

 

Published : 25 Mar 2022 04:12 PM
Last Updated : 25 Mar 2022 04:12 PM

முதல் பார்வை | ஆர்ஆர்ஆர் - வியத்தகு விஷுவல் ட்ரீட் ஓகே... ஆனால், உணர்வுபூர்வமாக ஒட்டாத படைப்பு!

பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தால் ஏற்படும் ஆபத்தை நட்பு, காதல், விஸ்வாசத்துக்கு இடையே ரத்தம், ரணம், ரௌத்திரம் கொண்டு எதிர்ப்பதே 'ஆர்ஆர்ஆர்'.

வேட்டைக்காக காட்டுக்கு வரும் ஆங்கிலேய அதிகாரி மற்றும் அவரின் மனைவி அங்கிருக்கும் பழங்குடியின சிறுமியை தூக்கிக்கொண்டு செல்கிறார்கள். அந்த இனத்தின் காப்பான் கொமரம் பீம், சிறுமியை மீட்க ஆங்கிலேயர்களை நெருங்க முயல்கிறார். அதேநேரம், ஆங்கிலேயர்களுக்கு விஸ்வாசமாக இருந்து, சொந்த மக்களையே எதிர்க்கும் கண்டிப்புமிக்க காவல் அதிகாரி ராமராஜுவுக்கு, கொமரம் பீம்மை கைது செய்யும் பொறுப்பு கொடுக்கப்படுகிறது. பீம்மை பிடித்துக் கொடுத்தால், அவரின் பல நாள் ஆசையான சிறப்பு அதிகாரி பதவி கொடுக்கப்படும். இப்படி இருவருமே தங்கள் நோக்கங்களுக்காக நகரும்போது ஏற்படும் நட்பு, காதல், விஸ்வாசத்துக்கு இடையே ராமராஜு பீம்மை பிடித்துக் கொடுத்தாரா, அவரின் கடந்த காலம் என்ன, பீம் சிறுமியை காப்பாற்றுவாரா என பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ரத்தம், ரணம், ரௌத்திரம் மிகுந்த திரைக்கதை.

கொமரம் பீம் என்ற கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆர், ராமராஜு என்ற கதாபாத்திரத்தில் ராம் சரண் நடித்துள்ளனர். இப்படிச் சொல்வதை விட, ராஜமௌலியின் பிரமாண்டத்துக்கு இருவரும் உயிர்கொடுத்துள்ளனர் எனலாம். இருவருக்குமே சமமான முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்கள் என்பதால் படம் முழுக்க நடனம், ஆக்‌ஷன் என ஒவ்வொரு ஃபிரேமிலும் போட்டிபோட்டுக் கொண்டு நடித்துள்ளனர். 'நாட்டு நாட்டு' பாடலில் இருவரின் நடனமும் பக்கா தியேட்டர் செலிபிரேஷனுக்கான மெட்டீரியலாக வெளிவந்துள்ளது. எனினும், ஜூனியர் என்டிஆர் சிலசமயங்களில் ராம்சரணை ஓவர்டேக் செய்கிறார். அது அவரின் கதாபாத்திர வடிவமைப்பால் கிடைத்தது. அவரின் என்ட்ரி காட்சிகள் சிலிர்ப்பூட்டும் தருணம்.

படத்தின் மற்றொரு முக்கிய கதாபாத்திரம் ஃபிளாஷ்பேக் காட்சிகளில் வரும் அஜய் தேவ்கன். சிறிது நேரமே வந்தாலும், முக்கியத்துவம் மிகுந்த கதாபாத்திரம் என்பதால் அதனை புரிந்துகொண்டு அஜய்யும் உழைப்பைக் கொடுத்துள்ளார். அலியா பட், சமுத்திரக்கனி, ஸ்ரேயா போன்ற பலர் இருந்தாலும் பெரிய ஸ்பேஸ் கொடுக்கப்படவில்லை. அதுவும் அலியா பட்டுக்கு மொத்தம் 6 சீன்களே உள்ளன. அவரின் கதாபாத்திரமும் எந்தவித ஈர்ப்பையும் ஏற்படுத்தவில்லை. ராம்சரண் ஜோடியாக நடித்தாலும் அவர்களுக்கான கெமிஸ்ட்ரியை விட, ராம்சரண் - ஜூனியர் என்டிஆர் ’கெமிஸ்ட்ரி’ நல்ல ஒர்க் அவுட் ஆகிறது.

ஆங்கிலேய கவர்னர் ஸ்காட் துரையாக ரே ஸ்டீவன்சன். முகபாவனையிலேயே வில்லத்தனம் காண்பிக்கிறார். இதேபோல், ஜூனியர் என்டிஆர் ஜோடி ஜெனியாக ஒலிவியா மோரிஸ். இவரின் பாத்திரத்தை பார்க்கும்போது மதராசபட்டினம் எமி நியாபகத்துக்கு வந்து செல்கிறார். இவர்களுடன், அலிசன் டூடி கதை நகர்த்துவதற்கு உதவியுள்ளார்.

கதையும், கதாபாத்திரங்களும் எந்த அளவுக்கு பலம் சேர்க்கிறதோ, அதே அளவுக்கு இந்தப் படத்தில் விஷுவல் எஃபெக்ட், ஒளிப்பதிவு, ஆக்‌ஷன் காட்சிகள் பிரமாண்டம் சேர்க்கின்றன. இன்ச் பை இன்ச் செந்தில் குமாரின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது என்றால், அதற்கு உயிர் கொடுக்கிறது ஶ்ரீனிவாஸ் மோகனின் விஷுவல் எஃபெக்ட்ஸ். சாலமன், நிக் பவல் என்ற இரட்டை சண்டைக்காட்சி அமைப்பாளர்கள் பிரமிக்க வைத்துள்ளனர். விஷுவல் எஃபெக்ட், ஒளிப்பதிவு, ஆக்ஷன் மூன்றும் சேர்ந்து ரசிக்க இடைவேளைக்கு முன்பு ஒரு காட்சி வரும். லாஜிக் இல்லாமல் பார்க்க வேண்டிய காட்சி அது.

மரகதமணி 'பாகுபலி'யின் இரண்டு பாகங்களிலும் பாடல்களுடன் பின்னணி இசைக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பார். இதில் ஏனோ 'நாட்டு நாட்டு' பாடலைத் தவிர எதுவும் மனதுக்குள் இசைக்கவில்லை. ஆனால், பின்னணி இசை 'பாகுபலி' ஃபீலில் உயிரோட்டம் கொடுத்துள்ளது. மதன் கார்க்கி பாடல்களையும், தமிழ்ப் பதிப்பு வசனங்களையும் எழுதியுள்ளார். ஒரு சில வசனங்கள் தெறிக்கவிடுகின்றன.

1920 காலகட்டத்தில் தெலுங்கு பகுதியில் ஆங்கிலேயர்களை எதிர்த்த அல்லூரி சீதாராம ராஜு, கொமாரம் பீம் என்ற இருவரின் வாழ்க்கையை மைப்படுத்தி, அதில் கற்பனைகளைப் புகுத்தி 'ஆர்ஆர்ஆர்' பிரமாண்டத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் ராஜமௌலி. 'ஆர்ஆர்ஆர்' படத்தைப் பார்க்க வரும் அத்தனை பேரின் எதிர்பார்ப்பும் 'பாகுபலி'யை மையப்படுத்தியே உள்ளன. இந்த அழுத்தத்தை திறம்பட சமாளித்து, ஒரு திரைப்படத்துக்கு மையக்கதை எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். ஆனால், திரைக்கதை?!

படத்தின் முதல் பாதி வேகம் இல்லாதது போல் இருந்தாலும், பழங்குடி மக்களை காட்டும் காட்சிகள், ஹீரோக்கள் என்ட்ரி, சிறுவனை காப்பாற்றும் காட்சி, இடைவேளை முன்பான சண்டைக் காட்சி என பார்வையாளர்களை கதையுடன் ஒன்றவைத்துச் செல்கிறது. இரண்டாம் பாதி சென்டிமென்ட் காட்சிகளால் ஒவ்வொருவரையும் சோதிக்கிறது. க்ளைமாக்ஸ் ஃபைட், பிரமாண்டம் என இருந்தாலும் ஏற்கெனவே, பார்த்த - யூகிக்கக் கூடிய சென்டிமென்ட் காட்சிகள் ஒருவித அயர்ச்சியை கொடுப்பதைத் தவிர்க்க முடியவில்லை. படத்தின் நீளம் மூன்று மணிநேரத்தை தாண்டி செல்கிறது. இந்தக் கதைக்களத்துக்கும், அதன் பிரமாண்டத்துக்கும் இந்த நேரத்தை சரி என்று வைத்துக்கொண்டாலும் மனதில் ஒட்டாத, பார்த்து பழக்கப்பட்ட காட்சிகளால் மூன்று மணிநேரம் எப்போது முடியும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

மற்றபடி ஃபயர் vs வாட்டர் கான்செப்ட் போன்று புதுமையான விஷயங்கள், வழக்கம்போல தனது பிரமாண்டம், நடிகர்களிடம் நடிப்பை வாங்கிய விதம், கதை சொல்லாடல் ஆகியவை இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி என்பதை அழுத்தம் திருத்தமாக்கியுள்ளது.

'பாகுபலி'யும் சரி, அதற்கு முந்தையை படங்களிலும் சரி... ராஜமௌலி எமோஷன்களை சிறப்பாக கையாண்டு வித்தை காட்டியிருப்பார். 'மகதீரா' 'நான் ஈ' உள்ளிட்ட அவரின் பல படங்களை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். 'பாகுபலி'யில் எமோஷனின் உச்சத்தை தொட்டிருந்ததால் உலகம் முழுவதும் அது கொண்டாடப்பட்டது. அதேபோன்றொரு முயற்சியை மீண்டும் ஒருமுறை 'ஆர்ஆர்ஆர்'-க்காக எடுத்திருக்கிறார். ஆனால், இம்முறை அது ஓவர்டோஸ் ஆகி ராஜமௌலி வழக்கமான 'எமோஷன் டச்' மனதில் ஒட்டாமல் பிரமாண்டம் மட்டுமே ஓட்டுகிறது.

மொத்தத்தில் குறைகள் பல இருந்தாலும் பெரிய திரையில் பார்த்து ரசிக்க வேண்டிய படம்தான் 'ஆர்ஆர்ஆர்'.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x