Published : 23 Mar 2022 09:04 PM
Last Updated : 23 Mar 2022 09:04 PM

'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் - ஸ்கிரீன் சேதப்படுத்தாமல் இருக்க ஆணிப் படுக்கையை ஏற்படுத்திய தியேட்டர்கள்

'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில், ஆந்திராவில் உள்ள திரையரங்குகள் ரசிகர்களை கட்டுப்படுத்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளன.

ராஜமெளலி இயக்கத்தில் 'ரத்தம் ரணம் ரெளத்திரம்' (ஆர்ஆர்ஆர்) பொங்கல் பண்டிகை மற்றும் சங்கராந்தி பண்டிகை வெளியீடாக உலகெங்கும் வெளியாகவிருந்தது. 'பாகுபலி'க்குப் பிறகான ராஜமெளலியின் பிரமாண்ட படைப்பு இது என்பதாலும், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்திருப்பதாலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் எதிர்பார்ப்புக்குரிய படமாக 'ஆர்ஆர்ஆர்' கவனம் ஈர்த்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் கடந்த ஜனவரி 7ஆம் தேதி அன்று வெளியாகவிருந்த நிலையில், புரமோஷன் பணிகளுக்காக இந்தியா முழுவதும் படக்குழு பயணம் செய்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியது. ஆனால், கரோனா அச்சம் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், நாளை மறுநாள் படம் ரிலீஸாக உள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும், இணைந்திருப்பதால் ரசிகர்கள் கட்டுக்கடங்காமல் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவருக்குமே வெறித்தமான ரசிகர்கள் அதிகம் என்பதால், அவர்களால் தியேட்டர்களில் ஸ்கிரீன்களுக்கு சேதம் ஏற்படாமல் இருக்க விஜயவாடாவில் உள்ள அன்னபூர்ணா திரையரங்க நிர்வாகம் திரைக்கு முன்பாக, ஆணி படுக்கை போன்ற ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் பல திரையரங்குகளில் திரைக்கு முன்பு ஆணிகளும் கம்பிகளும் பதியப்பட்டுள்ளன. மேலும் சில தியேட்டர்கள் முள் கம்பி தடுப்புகள் போன்றவற்றை ஏற்படுத்தியுள்ளன. சில மாதங்கள் முன் பவன் கல்யாணின் வக்கீல் சாப் படம் வெளியான போது தியேட்டர்களில் கண்ணாடி உள்ளிட்டவைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதால் இதுபோன்ற முன்னெச்சரிகளை ஏற்படுத்தி வருகின்றனர் ஆந்திர திரையரங்க நிர்வாகங்கள்.

இதனிடையே, படத்தின் புரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ராஜமெளலி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் அடங்கிய 'ஆர்ஆர்ஆர்' படக்குழு, ஹைதராபாத்தில் கிரீன் இந்தியா சேலஞ்ஜை முன்னெடுத்துள்ளனர். ராஜ்ய சபா எம்பி சந்தோஷ் குமார் முன்னிலையில் அவர்கள் செடிகளை நட்டுவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x