Published : 05 Jan 2022 03:31 PM
Last Updated : 05 Jan 2022 03:31 PM
டிக்கெட் விலையை குறைத்த ஆந்திர அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ள இயக்குநர் ராம் கோபால் வர்மா, ”ரேஷன் கடைகள் போல ரேஷன் தியேட்டர்கள் வருமா?” கலாய்ப்புத் தொனியில் கெள்வி எழுப்பியுள்ளார்.
ஆந்திர அரசு சில மாதங்களுக்கு முன்பு திரையரங்குகளுக்கு புதிய டிக்கெட் விலையை நிர்ணயம் செய்தது. அதன்படி, சினிமா அரங்குகளின் இருக்கை எண்ணிக்கையைப் பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. கிராமப்புறம், நகரப்பகுதிகளில் உள்ள தியேட்டர்களுக்கு ஒவ்வொரு விகிதத்திலும் கட்டணம் விதிக்கப்பட்டது. ஏசி வசதி கொண்ட சாதாரண தியேட்டர்கள் ரூ.150 வரையிலும், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அதிகபட்சமாக ரூ.250 வரையிலும், ஐமேக்ஸ் போன்ற பெரிய திரையரங்குகள் ரூ.300 வரையிலும் ஜிஎஸ்டி இல்லாமல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பராமரிப்புக் கட்டணமாக ரூ.3 முதல் 5 வரை தனியாகக் கட்டணம் வசூலிக்கலாம் என்று ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்தக் கட்டண உயர்வால் ஆந்திராவில் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன.
ஆந்திர அரசின் இந்த நடவடிக்கைக்கு தெலுங்கு திரையுலகில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் ஆந்திர அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில் அவர், “மாண்புமிகு அமைச்சர் பெர்னி நானி அவர்களே, நீங்கள் அல்லது உங்கள் பிரதிநிதிகள் பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் சார். திரைப்படங்கள் உட்பட எந்த ஒரு பொருளின் சந்தை விலையை நிர்ணயம் செய்வதில் அரசாங்கத்தின் பங்கு துல்லியமாக என்ன சார்?
கோதுமை, அரிசி, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும்போது, அரசாங்கம் தலையிட்டு அவற்றை சமநிலைக்குக் கீழே அல்லது அதற்கு மேல் விலையை நிர்ணயம் செய்யலாம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அது திரைப்படங்களுக்கு எவ்வாறு பொருந்தும்?
உணவு தானியங்களின் விலையை வலுக்கட்டாயமாகக் குறைப்பது விவசாயிகளை உத்வேகம் இழக்கச் செய்யும், இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டு தரமின்மை ஏற்படும் என்பது பொருளாதாரத்தின் அடிப்படை விதி. அதே கோட்பாடு திரைப்படத் தயாரிப்பிற்கும் பொருந்தும்.
ஏழைகளுக்கு சினிமா மிகவும் அவசியம் என்று நீங்கள் நினைக்கும் பட்சத்தில், மருத்துவம் மற்றும் கல்விச் சேவைகளுக்கு எப்படி அரசு மானியம் கொடுக்கிறீர்களோ, அதுபோல அரசின் பாக்கெட்டில் இருந்து சினிமாவுக்கும் ஏன் அரசு மானியம் தருவதில்லை? அரிசி, சர்க்கரை போன்றவற்றை ஏழைகளுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட ரேஷன் கடைகள் போல, ரேஷன் தியேட்டர்களையும் உருவாக்குவது பற்றி பரிசீலிப்பீர்களா?" என்று ராம் கோபால் வர்மா கூறியுள்ளார்.
Dear honourable minister of cinematography @perni_nani Sir, I humbly request you or your representatives to answer the following questions sir ..What precisely is the role of government in deciding a market price of any product including films sir ?
— Ram Gopal Varma (@RGVzoomin) January 4, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT