Published : 29 Oct 2021 06:39 PM
Last Updated : 29 Oct 2021 06:39 PM

'மரைக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்' - ஓடிடி வெளியீட்டுக்கு முன்னால் திரையரங்குகளில் வெளியாகுமா?

கொச்சின்

மோகன்லால் நடிப்பில் உருவாகியிருக்கும் பிரம்மாண்டத் திரைப்படமான 'மரைக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்' நேரடியாக ஓடிடியில் வெளியாவதற்கு முன் குறிப்பிட்ட திரையரங்குகளில் சில நாட்கள் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2019-ம் ஆண்டே 'மரைக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்' படத்துக்கான தணிக்கை முடிந்தது. கடந்த வருடம் மார்ச் மாதமே படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், கரோனா நெருக்கடியால் திரையரங்குகள் மூடப்பட்டன. வெளியீடும் தள்ளிப்போனது.

இந்நிலையில் கேரளாவில் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. எனவே 'மரைக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்' திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவ்வளவு பெரிய பொருட்செலவில் இந்தப் படம் வெளியாவதால், தனியாக வெளியாக வேண்டும், போட்டிக்கு வேறு படங்கள் இருக்கக் கூடாது, அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் தயாரிப்புத் தரப்பில் போன வருடமே வைக்கப்பட்டன.

ஆனால், தற்போது இந்தப் படத்துக்குக் கேரள திரையரங்க உரிமையாளர்கள் மொத்தமே 80 திரைகளை மட்டுமே தருவதாகச் சொன்னதாகவும், இதனால் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் தயாரிப்புத் தரப்பிலிருந்து சொல்லப்பட்டது. மேலும் இந்தப் படத்தை வெளியிடத் திரையரங்க உரிமையாளர்களிடம் வாங்கிய பணத்தையும் தயாரிப்பாளர் திருப்பித் தந்துவிட்டார்.

இதுகுறித்து கேரளத் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் விஜயகுமார், தயாரிப்பாளரின் முடிவு ஏன் என்று புரியவில்லை என்று அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும் திரையரங்குகளுக்குக் கூட்டம் வர மோகன்லால் போன்ற உச்ச நட்சத்திரம் நடித்திருக்கும் ஒரு பிரம்மாண்டப் படம் தேவை, எனவே இந்தப் படத்தைத் திரையரங்கில் வெளியிடுவது படத்துக்கு மட்டுமல்லாது துறையைச் சார்ந்திருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்குப் பயனைத் தரும் என்றும் விஜயகுமார் கூறியுள்ளார்.

எனவே நேரடி ஓடிடி வெளியீட்டுக்கு முன்பு, சில வாரங்கள் மட்டும் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் 'மரைக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்' திரைப்படத்தை வெளியிடலாம் என்று தயாரிப்புத் தரப்பு ஆலோசனை செய்து வருகிறது. 2020ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகளில் சிறந்த படம், சிறந்த கிராஃபிக்ஸ், சிறந்த உடையலங்காரம் என 3 தேசிய விருதுகளை இந்தப் படம் வென்றது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த விருது வழங்கும் விழாவும் முடிந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x