Published : 12 Oct 2021 12:29 PM
Last Updated : 12 Oct 2021 12:29 PM
தெலுங்குத் திரையுலகின் நடிகர் சங்கத் தேர்தலிலிருந்து தன்னை சிரஞ்சீவி விலகச் சொன்னார் என்று நடிகர் விஷ்ணு மஞ்சு கூறியுள்ளார்.
தெலுங்குத் திரையுலகின் நடிகர்கள் சங்கமான மா அமைப்பின் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் தலைமையிலான அணியும், நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணியும் போட்டியிட்டன. தலைவர் பதவிக்கு விஷ்ணு மஞ்சுவும், பிரகாஷ்ராஜும் போட்டியிட்டனர். இதில் பிரகாஷ்ராஜ் தோல்வியடைந்துள்ளார்.
பிரகாஷ்ராஜ் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் கிடையாது, வெளியிலிருந்து வந்தவர், தெலுங்கு கலைஞர்களைத்தான் ஆதரிக்க வேண்டும் என்கிற பிரச்சாரமே பிரகாஷ்ராஜின் தோல்விக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. எனவே, தன்னை ஒரு அந்நியனாகப் பார்க்கும் நடிகர்களிடையே தான் இருக்க விரும்பவில்லை என்று கூறி சங்கத்திலிருந்து ராஜினாமா செய்துள்ளார் பிரகாஷ்ராஜ்.
இந்நிலையில் வெற்றிக்குப் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஷ்ணு மஞ்சு பேசியதாவது:
"அனைவரும் ஏகமனதாக பிரகாஷ்ராஜைத் தேர்ந்தெடுப்போம் என்று சொல்லி என்னைத் தேர்தலிலிருந்து சிரஞ்சீவி பின்வாங்கச் சொன்னார். ஆனால், எனக்கும் என் அப்பாவுக்கும் அதில் உடன்பாடில்லை என்பதால் நாங்கள் விலகவில்லை.
பிரகாஷ்ராஜ் தனது தோல்விக்குக் காரணம், தன்னை எல்லோரும் வெளியிலிருந்து வந்த அந்நியராகப் பாவித்ததே என்று கூறினார். ஆனால், அவருக்கு வாக்களித்த 274 உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே. எனவே பிரகாஷ்ராஜ் நினைப்பது தவறு. சிரஞ்சீவியின் குடும்பத்தினர் பிரகாஷ்ராஜுக்குத்தான் ஆதரவு தந்தனர். அதனால் ராம் சரண் கண்டிப்பாக அவருக்குத்தான் வாக்களித்திருப்பார்.
தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதெல்லாம் கடந்த காலம். அது முடிந்துவிட்டது. எனக்கு பிரகாஷ்ராஜைப் பிடிக்கும். இனி சங்கத்தின் தேர்தல்களில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள் போட்டியிட முடியாதவாறு புது விதிகளை நாங்கள் கொண்டுவரப்போவதாக எந்த வாக்குறுதியும் தரவில்லை.
மோகன்பாபுவின் மகனுக்கு வாக்களிப்போம் என்று எல்லோரும் நினைத்ததால்தான் நான் வெற்றி பெற்றேன். முன்னாள் சங்கத் தலைவர் நரேஷின் ஆதரவுக்கு நன்றி".
இவ்வாறு விஷ்ணு மஞ்சு பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT