Published : 28 Jul 2021 02:04 PM
Last Updated : 28 Jul 2021 02:04 PM

ரோஹித் ஷெட்டியிடம் மன்னிப்பு கோரிய அல்போன்ஸ் புத்திரன்

முன்னணி இயக்குநர் ரோஹித் ஷெட்டியிடம் மன்னிப்பு கோரியுள்ளார் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்.

மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். இவருடைய 'பிரேமம்' திரைப்படம் இந்திய அளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இவர் 'சென்னை எக்ஸ்பிரஸ்' படம் வெளிவந்தபோது, அதில் தமிழ் குறித்துக் காட்டியிருப்பது தொடர்பாக சில கருத்துகளை முன்வைத்தார். இதனால் 'சென்னை எக்ஸ்பிரஸ்' இயக்குநர் ரோஹித் ஷெட்டிக்கும், அல்போன்ஸ் புத்திரனுக்கும் பிரச்சினை ஏற்பட்டது.

தற்போது தனது செயலுக்கு ரோஹித் ஷெட்டியிடம் மன்னிப்பு கோரியுள்ளார் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். இது தொடர்பாகத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அல்போன்ஸ் புத்திரன் கூறியிருப்பதாவது:

" 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் தமிழ் குறித்துக் காட்டியதில் ரோஹித் ஷெட்டியுடன் எனக்குப் பிரச்சினை ஏற்பட்டதாக நீண்ட நாட்களுக்கு முன்பு நான் கூறியிருந்தேன். அது என்னுடைய தனிப்பட்ட கருத்து. தமிழர்களைக் களங்கப்படுத்த வேண்டும் என்பது அவருடைய நோக்கமல்ல என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். அவர் ஷங்கரின் பாடல்கள் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளால் உந்தப்பட்டு தனது படத்தின் காட்சிகளை வைப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே, என்னுடைய கருத்துகள் குறித்து நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

தற்போது 'சிங்கம்' இரண்டாம் பாகம் குறித்து நான் ஒரு நல்ல விஷயம் சொல்கிறேன். அரசியல் கட்சிகளிடமிருந்து பணம் பெறுவது குறித்து நாயகனின் அம்மா கோபப்படுவது போன்ற ஒரு காட்சி படத்தில் உண்டு. அந்தக் காட்சியில் நான் அழுதுவிட்டேன். கதாநாயகன் தன் தாயிடம் தோற்றுப்போகும் அந்தக் காட்சி எனக்குப் பிடித்திருந்தது.

என்னுடைய ஒட்டுமொத்தப் படம் பார்க்கும் வரலாற்றில் அப்படி ஒரு காட்சியை நான் பார்த்ததில்லை. அதுபோன்ற ஒரு காட்சியை அமைத்த உங்களுக்கு என்னுடைய மரியாதையைச் சமர்ப்பிக்கிறேன். உங்களுடைய பெரும்பாலான படங்கள் எனக்குப் பிடிக்கும். 'கோல்மால்' சீரிஸ், 'சிங்கம்' சிரீஸ், 'சிம்பா', 'சூரியவன்ஷி' படத்துக்காக நான் காத்திருக்கிறேன் சார். இந்த இளைய சகோதரனை மன்னிக்கவும்".

இவ்வாறு அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x