Published : 17 Jun 2021 07:14 PM
Last Updated : 17 Jun 2021 07:14 PM

நான் கேட்டதில் மிகச் சிறந்த கதை இது: மகளின் கதையைப் பகிர்ந்த பிருத்விராஜ் பெருமிதம்

தனது மகள் எழுதிய சிறிய கதையைப் பகிர்ந்திருக்கும் நடிகர் பிருத்விராஜ், ஊரடங்கு சமயத்தில் தான் கேட்ட மிகச் சிறந்த கதை இதுதான் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

2002ஆம் ஆண்டு மலையாளத்தில் நடிகராக அறிமுகமான பிருத்விராஜ், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் தடம் பதித்தார். 2019ஆம் ஆண்டு மோகன்லால் நாயகனாக நடித்த 'லூசிஃபர்' திரைப்படம் மூலம் இயக்குநராகவும் வெற்றி கண்டார். 'லூசிஃபர்' இரண்டாம் பாகத்தையும் பிருத்விராஜே இயக்குகிறார்.

இன்னொரு பக்கம் 'ஆடுஜீவிதம்', 'தீர்ப்பு', 'பரோஸ்' உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். 'அந்தாதுன்' திரைப்படத்தின் மலையாள ரீமேக்கிலும் இவரே நாயகன்.

இந்நிலையில் தனது மகள் அலங்க்ருதா எழுதிய சிறிய கதை ஒன்றை பிருத்விராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "தந்தையும் மகனும் அமெரிக்காவில் வசித்து வந்தனர். இரண்டாம் உலகப் போர் நடந்தது. இருவரும் அகதிகள் முகாமுக்கு மாற்றப்பட்டனர். அங்கு 2 வருடங்கள் வசித்தனர். போர் முடிந்தது. மீண்டும் வீட்டுக்குச் சென்று என்றும் சந்தோஷமாக வாழ்ந்தனர்" என்று பிருத்விராஜின் மகள் எழுதி வைத்துள்ளார்.

இதைப் புகைப்படம் எடுத்துப் பகிர்ந்திருக்கும் பிருத்விராஜ், "இந்த ஊரடங்கு காலத்தில் நான் கேட்ட சிறந்த கதை இதுதான். ஆனால், பெருந்தொற்றுக் காலத்தில் இதைப் படம் பிடிப்பது முடியாத காரியம் என்பதால் நான் இன்னொரு கதையைத் தேர்ந்தெடுத்தேன். ஆம். மீண்டும் இயக்கலாம் என்று நினைத்து வருகிறேன். கோவிட் கட்டுப்பாடுகள், விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒரு திரைப்படத்தை எடுக்க முடியுமா என்று பார்க்கிறேன். விரைவில் தகவல்கள் வரும்" என்று பதிவிட்டுள்ளார்.

பிருத்விராஜின் மனைவி சுப்ரியா மேனனும், மகளின் பதிவைப் பகிர்ந்து, 'எங்கள் வீட்டுக் கதாசிரியர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x