Published : 28 May 2021 07:04 PM
Last Updated : 28 May 2021 07:04 PM

முன்னணி இயக்குநரை எதிரியாக நினைக்கும் 'பாகுபலி' கதாசிரியர்

ஹைதராபாத்

முன்னணி இயக்குநர் ஒருவரைத் தான் எதிரியாகக் கருதுவதாக 'பாகுபலி' கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்தியத் திரையுலகின் முன்னணிக் கதாசிரியராக வலம் வருபவர் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களின் கதைகளும் விஜயேந்திர பிரசாத் எழுதியதுதான். இருவரது கூட்டணியில் உருவான 'பாகுபலி' முதல் மற்றும் இரண்டாம் பாகம் உலக அளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றவை.

தற்போது ஏ.எல்.விஜய் இயக்கி வரும் 'தலைவி' படத்தின் கதை, திரைக்கதையில் பணிபுரிந்துள்ளார் விஜயேந்திர பிரசாத். இவரது கதை, திரைக்கதையில் உருவாகும் படம் என்றாலே, அதற்குத் தனிமதிப்பு திரையுலக வட்டாரத்தில் உருவாகியுள்ளது.

சமீபத்தில் தெலுங்கு நடிகர் அலி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் விஜயேந்திர பிரசாத். அதில் அலியின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் "ராஜமவுலிக்கு அடுத்து உங்களுக்கு மிகவும் பிடித்த இயக்குநர் யார்" என்ற கேள்விக்கு "பூரி ஜெகந்நாத்" என்று பதிலளித்துள்ளார் விஜயேந்திர பிரசாத்.

அதோடு மட்டுமன்றி தனது செல்போன் வால் பேப்பரை அலியிடம் காட்டியுள்ளார். அதில் பூரி ஜெகந்நாத்தின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. "இவர் மீது எனக்குப் பொறாமை இருக்கிறது. இந்தப் புகைப்படம் என்றும் எனது எதிரியை எனக்கு ஞாபகப்படுத்தும்" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார் விஜயேந்திர பிரசாத்.

பல்வேறு முன்னணி நடிகர்களை வைத்துத் தொடர்ச்சியாக ஹிட் படங்களைக் கொடுத்தவர் பூரி ஜெகந்நாத். இடையே இவருடைய படங்கள் தொடர்ச்சியாகத் தோல்வியைத் தழுவின. 2019ஆம் ஆண்டு இவருடைய இயக்கத்தில் வெளியான 'ஸ்மார்ட் ஷங்கர்' படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x