Published : 12 Apr 2021 04:18 PM
Last Updated : 12 Apr 2021 04:18 PM
ஃபகத் பாசிலின் படங்கள் தொடர்ந்து ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியிடப்படுவதால் அவரது அடுத்தடுத்த படங்களுக்குத் தடை விதிக்கப்படவில்லை என்று கேரளத் திரையரங்க உரிமையாளர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் ஃபகத் பாசில். சிறந்த நடிகர் என்று தேசிய அளவில் பிரபலமான ஃபகத்தின் படங்களுக்கு கேரளா மட்டுமின்றி இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் எதிர்பார்ப்பும், ரசிகர் கூட்டமும் உண்டு.
கடந்த ஒரு வருடமாக கரோனா நெருக்கடி நிலவி வருவதால் பல்வேறு நிலையில் ஊரடங்கு உத்தரவுகள் தொடர்ந்து அமலில் உள்ளன. இதனால் திரையரங்குகள் திறக்கவும் ஒரு கட்டத்தில் தடை விதிக்கப்பட்டது. பின்பு 50 சதவீத இருக்கைகளை நிரப்பலாம் என்றும், பின் 100 சதவீதம் அனுமதிக்கலாம் என்றும் அடுத்தடுத்து உத்தரவுகள் வந்தாலும் பெரிய நட்சத்திரங்கள், பிரம்மாண்டப் படங்களைத் தவிர வேறு எதற்கும் பெரிய அளவில் ரசிகர் கூட்டம் வருவதில்லை.
தற்போது கரோனா இரண்டாவது அலை காரணமாக மீண்டும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த ஒரு வருடத்தில் ஃபகத் பாசிலின் மூன்று திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகியுள்ளன.
கடந்த வருடம் ’சி யூ ஸூன்’, இந்த வருடம் ’இருள்’ மற்றும் ’ஜோஜி’ ஆகிய திரைப்படங்கள் அமேசான் ப்ரைம் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் ஆகிய தளங்களில் வெளியாகியுள்ளன. திரையரங்குகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் ஃபகத் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களைக் காணவே ரசிகர் கூட்டம் வரும். ஆனால், மூன்று படங்களும் ஓடிடியில் வெளியாகியுள்ளது திரையரங்க உரிமையாளர் சங்கத்தினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்டது.
இதனால், இனி ஃபகத் பாசில் தொடர்ந்து ஓடிடி தளங்களில் நேரடியாகப் படத்தை வெளியிட்டால் எதிர்காலத்தில் அவரது எந்தப் படத்தையும் கேரளத் திரையரங்குகளில் திரையிட மாட்டோம் என்று சங்கத்தினர் எச்சரித்துள்ளதாக திங்கட்கிழமை காலை செய்திகள் பரவின. மேலும் இதுகுறித்து நடிகர் திலீப், தயாரிப்பாளர் பி. உன்னிகிருஷ்ணன் ஆகியோர் ஃபகத்திடம் பேசி அவரை இதுகுறித்து முடிவெடுக்கச் சொல்லிக் கேட்டுள்ளதாகவும் இந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தன.
ஆனால், இப்படி எந்தவொரு எச்சரிக்கையோ, தடையோ விதிக்கப்படவில்லை என்று கேரள திரையரங்க உரிமையாளர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. இந்தச் செய்திகள் அனைத்தும் புரளிகள் என்றும், ஃபகத் பாசிலிடமோ அவர் நடித்திருக்கும் படங்களாலோ எங்களுக்கு எந்தவிதப் பிரச்சினையும் இல்லை, எல்லாத் தரப்புடனும் நாங்கள் நல்ல நட்போடு இருக்கிறோம் என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் கூறியுள்ளார். மேலும் தான் ஃபகத்திடம் இதைப் பற்றிப் பேசவில்லை என்று தயாரிப்பாளர் உன்னிகிருஷ்ணனும் கூறியுள்ளார்.
ஃபகத் பாசில் நடிப்பில் அடுத்ததாக ’மாலிக்’ திரைப்படம் ஈகைத் திருநாள் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT