Published : 05 Apr 2021 09:08 PM
Last Updated : 05 Apr 2021 09:08 PM
பவன் கல்யாண் போன்றவர்கள் தான் வரலாற்றில் இடம் பிடிப்பார்கள் என்று தயாரிப்பாளர் பண்ட்ல கணேஷ் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஸ்ரீராம் வேணு இயக்கத்தில் பவன் கல்யாண், பிரகாஷ் ராஜ், நிவேதா தாமஸ், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வக்கீல் சாப்'. இந்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'பிங்க்' படத்தின் தெலுங்கு ரீமேக் இது என்பது நினைவு கூரத்தக்கது.
மேலும், அரசியலுக்காக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த பவன் கல்யாண் மீண்டும் திரையுலகிற்கு இந்தப் படத்தின் மூலம் திரும்பியுள்ளார். இதனால் 'வக்கீல் சாப்' படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகவுள்ளது.
'வக்கீல் சாப்' படத்தை விளம்பரப்படுத்தும் விழா நேற்று (ஏப்ரல் 4) நடைபெற்றது. இதில் பவன் கல்யாண் உள்ளிட்ட படக்குழுவினருடன், திரையுலகினர் பலரும் கலந்து கொண்டார்கள். கரோனா அச்சுறுத்தலால் விழா அழைப்பிதழ் இருந்தால் மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.
இந்த விழாவில் பவன் கல்யாண் நடித்த 'தீன் மார்', 'கப்பர் சிங்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த பண்ட்ல கணேஷ் பேசியதாவது:
"வெங்கடாசலபதிக்கு அன்னமைய்யா, சிவனுக்கு கண்ணப்பர், ராமருக்கு ஹனுமான், பவன் கல்யாணுக்கு பண்ட்ல கணேஷ். நான் அவரது உண்மையான பக்தன். அவருடன் பழக்கம் ஏற்பட்டுவிட்டால் வாழ்க்கை முழுக்க அவரை விட்டு விலக முடியாது. அப்படி அவருக்கு அடிமையாகிவிடுவோம்.
பலர் வருவார்கள், போவார்கள். ஆனால் பவன் கல்யாண் போன்றவர்கள்தான் வரலாற்றில் இடம் பிடிப்பார்கள். ஒவ்வொருநாளும் ஓய்வின்றி 18 மணி நேரம் உழைத்து வருகிறார். அவரது திரைப்படங்கள் மூலம் குறைந்தபட்சம் 1200 பேருக்கு வேலை தருகிறார்"
இவ்வாறு பண்ட்ல கணேஷ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT