Published : 19 Feb 2021 04:56 PM
Last Updated : 19 Feb 2021 04:56 PM

முதல் பார்வை: ‘த்ரிஷ்யம் 2’

செய்த குற்றத்தை மறைக்கப் போராடுகின்ற ஒரு குடும்பம், அடுத்தடுத்து சிக்கல்களை எதிர்கொண்டால் அதுவே ‘த்ரிஷ்யம் 2’

எதிர்பாராத ஒரு சூழலில் தன் மகள் செய்த ஒரு கொலையை மறைத்து, அவமானங்களிலிருந்து தன் குடும்பத்தைக் காக்க உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டரான ஜார்ஜ்குட்டி காவல்துறையின் கண்ணில் மண்ணைத் தூவி தப்பிப்பதே ‘த்ரிஷ்யம்’ படத்தின் கதை.

முதல் பாகம் முடிந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்குகிறது ‘த்ரிஷ்யம் 2’. அப்போது சாதாரண கேபிள் ஆபரேட்டராக இருந்த ஜார்ஜ்குட்டி இப்போது ஒரு தியேட்டர் உரிமையாளர். தான் எழுதி வைத்திருக்கும் ஒரு கதையைப் படமாகத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தின் தாக்கத்திலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் மூத்த மகள் அஞ்சு. இரண்டாம் மகள் அனு இப்போது ஒரு துடிப்பான டீன் ஏஜ் பெண். ஆறு ஆண்டுகளில் கணவனிடம் ஏற்பட்ட மாற்றங்களை விரும்பாத ராணி.

ஆறு ஆண்டுகளாக எந்தப் பிரச்சினைகளும் இல்லாமல் நிம்மதியாகப் போய்க் கொண்டிருந்தாலும், மொத்தக் குடும்பமும் எப்போதும் சிறிய பயத்துடனே நாட்களை நகர்த்தி வருகிறது. ஜார்ஜ்குட்டியின் வளர்ச்சியால் பொறாமையில் இருக்கும் ஊர் மக்களில் பலர், கொலையை ஜார்ஜ்குட்டி செய்ததாகவே தீர்க்கமாக நம்புகின்றனர். ஜார்ஜ்குட்டியை மீண்டும் சிக்கவைக்க கண்ணில் விளக்கெண்ணையோடு காத்திருக்கும் போலீஸாருக்கு அல்வா சாப்பிட்டதுபோல ஒரு துப்பு கிடைக்கிறது. இதனால் மீண்டும் சிக்கலில் மாட்டுகிறது ஜார்ஜ்குட்டி குடும்பம். அதை அவர்கள் எப்படி எதிர்கொண்டனர்? போலீஸாரால் ஜார்ஜ் குட்டிக்கு தண்டனை பெற்றுத் தர முடிந்ததா? இறுதியில் வென்றது யார் என்பதே ‘த்ரிஷ்யம் 2’.

முதல் பாகத்தின் க்ளைமாக்ஸ் காட்சியிலிருந்து ஒரே ஒரு இழையை உருவாக்கி அதிலிருந்து நூல் பிடித்து ஒரு முழுக் கதையை வடிவமைத்துள்ளார் இயக்குநர் ஜீத்து ஜோசப்.

ஜார்ஜ்குட்டியாக மோகன்லால். வழக்கம்போல ஆர்ப்பாட்டமில்லாமல் உணர்வுகளை முகத்தில் வெளிப்படுத்தி மனம் கவர்கிறார். எந்நேரமும் லேசான குற்ற உணர்வோடு இருப்பது, முந்தைய சம்பவங்களைப் பற்றிப் பேச வருபவர்களின் கண்களைப் பார்க்கத் தயங்குவது என ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்கிறார். ஜார்ஜ்குட்டியின் மனைவி ராணியாக மீனா. கணவனிடம் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு வெதும்புவதாகட்டும், பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் குற்ற உணர்வில் அழுது புலம்புவதாகட்டும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மகள்களாக அன்ஸிபா, எஸ்தர் அனில், காவல்துறை உயரதிகாரியாக வரும் முரளி கோபி என அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். முதல் பாகத்தைக் காட்டிலும் இப்படத்தில் ஆஷா சரத் வரும் நேரம் குறைவு எனினும் மனதில் நிற்கிறார்.

படத்தின் மிகப்பெரிய பலம் இசை. படத்தின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அடக்க வேண்டிய இடங்களில் அடக்கி, அதிர வேண்டிய இடங்களில் அதிரச் செய்கிறார் அனில் ஜான்ஸன். மலையாளப் படங்கள் என்றதுமே சுற்றுலாத் துறை விளம்பரம் போல பச்சைப் பசேல் மரங்களையும், மலைகளையும் மட்டுமே காட்டிக் கொண்டிராமல் கதைக்குத் தேவையானதைக் கண்ணுக்கு உறுத்தாமல் காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் சதீஷ் குருப்.

படம் தொடங்கிய பத்தாவது நிமிடம் நம்மைத் தொற்றிக் கொள்ளும் பரபரப்பு படம் முடியும் வரை நம்மை விட்டு நீங்காமல் பார்த்துக் கொள்கிறார் திரைக்கதையாசிரியர் ஜீத்து ஜோசப். முதல் ஒரு மணி நேரத்தில் தேவையில்லாத திணிப்புகளாய் நாம் நினைக்கும் ஒவ்வொரு விஷயத்துக்கும் இரண்டாம் பாதியில் ஒரு தொடர்பு ஏற்படுத்தியது புத்திசாலித்தனம். இருப்பினும் முதல் பாதியில் எஸ்தர் கதாபாத்திரத்தின் பள்ளி நண்பர்கள் குறித்த காட்சிகள், எஸ்தர் தனது நண்பனுடன் பேசும்போது மீனா அவரைக் கண்டிப்பது போன்ற படத்துக்கு தொடர்பே இல்லாத காட்சிகள் எதற்கு என்று தெரியவில்லை.

படத்தின் முதல் ட்விஸ்ட் நடக்கும்போது இத்தனை விழிப்புடன் இருக்கும் ஜார்ஜ்குட்டியால் எப்படி அதைத் தெரிந்துகொள்ளாமல் இருக்க முடிந்தது என்ற கேள்வியும் நமக்கு எழத்தான் செய்கிறது. ஜார்ஜ்குட்டியால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை என்பது போன்ற சில காட்சியமைப்புகள், அதைச் சரிகட்ட அதிர்ஷ்டம் என்பது போன்ற ஜல்லியடிப்புகள் என்று ஒரு சில லாஜிக் மீறல்களும் துருத்திக் கொண்டிருக்கின்றன. ஆயினும் இந்தக் குறைகளை எல்லாம் திரைக்கதை என்னும் மாயாஜாலத்தில் மறைத்து, நம்மை ஒரு நொடி கூட அவற்றைப் பற்றி யோசிக்கவிடாமல் செய்ததே இப்படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்.

இறுதியில் தவறு செய்தவனுக்கு அவனது மனசாட்சிதான் மிகப்பெரிய நீதிமன்றம் என்ற கருத்தை முன்வைத்த இயக்குநரை மனதாரப் பாராட்டலாம்.

கரோனா தொற்றுக் காலத்தில் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டு இன்று அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியாகியிருக்கும் ‘த்ரிஷ்யம் 2’ தனது முதல் பாகத்துக்குச் சற்றும் சளைத்ததல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x