Published : 07 Jan 2021 11:15 AM
Last Updated : 07 Jan 2021 11:15 AM
தமிழகத்தில் திரையரங்கங்கள், மல்டி பிளக்ஸ்களில் கடந்த ஜன.4 முதல் பார்வையாளர்கள் எண்ணிக்கையை 100 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அரசின் இந்த உத்தரவுக்கு திரைத்துறையினர் வரவேற்றாலும் சுகாதாரத்துறை மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. மருத்துவர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழகத்தின் நிலை இப்படியிருக்க, திரையரங்குகளை திறப்பதற்கான கேரள அரசின் அறிவிப்புக்கு கேரளா பிலிம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று இது குறித்து முடிவு செய்வதற்காக நடைபெற்ற கூட்டத்தில் திரையரங்குகளை திறக்கக் கூடாது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கேரளா பிலிம் சேம்பர் நிர்வாகிகள் கூறியதாவது:
பொழுதுபோக்கு வரி குறித்து கேரள அரசு எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாத நிலையில் திரையரங்குகளை திறப்பது சரியாக இருக்காது. அரசிடமிருந்து எந்தவொரு முறையான தகவலும் வராமல் இருக்கும்போது பொழுதுபோக்கு வரியும் வசூலிக்கப்படக்கூடாது. திரையரங்குகளில் வெறும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி கொடுப்பது சரியான தீர்வல்ல. மேலும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே திரையரங்குகள் இயங்க வேண்டும் என்றும் கூறியிருப்பதையும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT