Published : 31 Dec 2020 04:44 PM
Last Updated : 31 Dec 2020 04:44 PM

அரசியல் ஒரு அபத்தம், சேறு; ரஜினி மீது ஒட்டாமல் இருப்பதே நல்லது: மோகன் பாபு

ஹைதராபாத்

அரசியலுக்கு வரவில்லை என்று ரஜினி அறிவித்திருப்பதற்கு, மோகன் பாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரவில்லை என்று சமீபத்தில் அறிவித்தார் ரஜினி. இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் சமூக வலைதளத்தில் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதைக் காண முடிந்தது.

ரஜினியின் இந்த முடிவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். உடல்நிலை தான் முக்கியம் எனக் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது, ரஜினியின் முடிவு குறித்து அவருடைய நெருங்கிய நண்பரும், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகருமான மோகன் பாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் மோகன் பாபு கூறியிருப்பதாவது:

"ரஜினிகாந்த் என் உயிர் நண்பர் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அவரது உடல்நிலை காரணமாக அரசியலில் இறங்கவில்லை என்று அறிவித்தார். ஒரு வகையில் அவர் அரசியலில் ஈடுபடவில்லை என்பது உங்களுக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் என்றாலும், ஒரு நண்பனாகவும், அவரது உடல்நிலையை முழுமையாக அறிந்தவனாகவும், அவர் அரசியலில் இறங்காமல் இருப்பது நல்லது என்று நான் நம்புகிறேன்.

நான் அவரிடம் அரசியல் குறித்துப் பல முறை பேசியுள்ளேன். நீ மிகவும் நல்லவன், எறும்புக்குக் கூட தொந்தரவு நினைக்காதவன், என் பார்வையில் மிக உயர்ந்த மனிதன் நீ. உன்னைப் போன்ற, என்னைப் போன்ற ஆட்களுக்கு அரசியல் ஒத்து வராது. ஏனென்றால், நாம் உண்மையை அப்பட்டமாகப் பேசுபவர்கள், யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம், பணம் கொடுத்து வாக்குகளை வாங்க முடியாது, வாங்கவும் மாட்டோம். இங்கு யாரை நம்புவது, யாரை நம்பக் கூடாது என்பது தெரியாது.

அரசியலில் இறங்கும் வரை நல்லவன் என்று சொல்பவர்கள் நாளை அரசியலுக்கு வந்தபின் கெட்டவன் என்பார்கள். அரசியல் ஒரு அபத்தம், சேறு. அந்தச் சேறு உங்கள் மேல் ஒட்டாமல் இருப்பதே நல்லது. ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவரும் ரஜினிகாந்தைப் போலவே நல்லவர்கள். நீங்கள் அனைவரும் எனது நண்பரின் முடிவைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்".

இவ்வாறு மோகன் பாபு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x