Published : 24 Nov 2020 10:55 AM
Last Updated : 24 Nov 2020 10:55 AM
தனக்கிருந்த உடல்நலப் பிரச்சினையால் பக்கவாதம் வரவும், இறந்து போகவும் வாய்ப்புகள் இருந்ததாக நடிகர் ராணா கூறியுள்ளார்.
தெலுங்குத் திரையுலகில் கிராஃபிக்ஸ் கலைஞராகத் தனது பணியை ராணா தொடங்கினார். மகேஷ் பாபுவின் 'சைனிகுடு' திரைப்படத்தின் கிராஃபிக்ஸ் பொறுப்பை ராணாதான் கவனித்தார். இதற்காக அவருக்கு நந்தி விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
'லீடர்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான இவர், பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகன். 'பாகுபலி' படத்தில் வில்லனாக நடித்து தேசிய அளவில் பிரபலமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெவ்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றையும் ராணா தொடங்கினார். சமீபத்தில் ஆஹா ஓடிடி தளத்தில் நடிகை சமந்தா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் ராணா கலந்துகொண்டார். இந்தப் பகுதியின் முன்னோட்டம் இணையத்தில் பதிவேற்றப்பட்டது.
இதில் பேசியிருக்கும் ராணா, "வாழ்க்கை மிக வேகமாகப் போய்க் கொண்டிருக்கும்போது திடீரென ஒரு நிறுத்தம் வந்தது. பிறந்ததிலிருந்தே எனக்குச் சில உடல் உபாதைகள் இருந்தன. ரத்த அழுத்தம், இதயத்தைச் சுற்றி கால்சியம் அடைத்திருந்தது. சிறுநீரகச் செயல்பாட்டில் பாதிப்பு இருந்தது. இதனால் 70 சதவீதம் ரத்தக் கசிவுக்கான, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் இருந்தன. இறப்பதற்கும் 30 சதவீத வாய்ப்புகள் இருந்தன" என்று குறிப்பிட்டுள்ளார்.
ராணாவைச் சுற்றியிருப்பவர்கள் மனமுடைந்து போனாலும் ராணா ஒரு பாறை போல வலுவாக இருந்தார் என்றும், அதைத் தன் கண்ணாலேயே தான் பார்த்திருப்பதால் ராணா தன்னுடைய சூப்பர் ஹீரோ என்றும் சமந்தா கூறியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் தான் ராணாவுக்கும், மிஹிகா பஜாஜுக்கும் திருமணம் முடிந்தது. இதற்கு நடுவில் ராணா சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்ததாகச் செய்திகள் வந்தன. ஆனால், இவை புரளிகள் என ராணா தெளிவுபடுத்தியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT