Published : 09 Nov 2020 02:25 PM
Last Updated : 09 Nov 2020 02:25 PM
ஹைதராபாத்தில் விமான இறங்குதளத்துடன் கூடிய திரைப்பட நகரம் உருவாக்கப்படும் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
நேற்று (08.11.20) தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் நாகர்ஜுனா உள்ளிட்டோர் தெலங்கானா வெள்ள நிவாரண நிதிக்காகத் திரட்டிய தொகையை முதல்வர் சந்திரசேகர் ராவை நேரில் சந்தித்து ஒப்படைத்தனர். மேலும், தெலங்கானாவில் திரையரங்குகளைத் திறக்க அனுமதியளித்ததற்கும் நன்றி தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் சந்திரசேகர் ராவ், ஹைதராபாத் நகரில் 1,500 - 2,000 ஏக்கர் பரப்பளவில் விமான இறங்குதளத்துடன் கூடிய திரைப்பட நகரம் உருவாக்கப்படும் என்று கூறினார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது:
''1,500 - 2,000 ஏக்கர் பரப்பளவில் விமான இறங்குதளம் உள்ளிட்ட அனைத்துவிதமான வசதிகளுடன் கூடிய உலகத் தரத்திலான திரைப்பட நகரம் ஒன்று ஹைதரபாத் புறநகர்ப் பகுதியில் உருவாக்கப்பட உள்ளது. அங்கு எதிர்காலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அதிநவீனத் தொழில்நுட்பங்களுடன் கூடிய ஸ்டுடியோக்களை அமைக்க திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.
தெலுங்குத் திரைப்படத் துறையை மேலும் மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் தொழில்நுட்ப நகரத்தில் ஏராளமான வாய்ப்புகள் உருவாகும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் இங்கு வாழ்கின்றனர். இந்த நகரம் அனைவருக்கும் அடைக்கலம் வழங்கும் திறனைக் கொண்டுள்ளது. திரைப்படப் படப்பிடிப்பு மற்றும் பிற அனைத்துத் தயாரிப்புப் பணிகளும் வசதியாக நடைபெறுவதற்கு ஏற்ற அற்புதமான சூழலை இங்கு உருவாக்க முடியும்''.
இவ்வாறு சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT