Published : 13 Sep 2020 06:57 AM
Last Updated : 13 Sep 2020 06:57 AM
பெங்களூருவில் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் கீழ் கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி, ஹோட்டல் அதிபர்கள் விரேன் கன்னா, முகமது அனூப், ராகுல் ஷெட்டி, பிரித்வி ஷெட்டி, ஆர்.டி.ஓ. ஆய்வாளர் ரவி ஷங்கர், ஜனதா தள கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா ஆல்வா உள்ளிட்ட 29 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
அவர்களை கே.சி.ஜெனரல் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, போதைப் பொருள் உட்கொண்டனரா என்பதை கண்டறியும் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைக்கு ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகிய இருவரும் எதிர்ப்பு தெரிவித்து, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போலீஸாரின் கடும் எச்சரிக்கைக்கு பின்னர் இருவரின் ரத்தம், சிறுநீர், முடி ஆகிய மாதிரிகள் பெறப்பட்டு போதைப் பொருள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இருவரும் போதைப் பொருள் உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து குற்றப்பிரிவு போலீஸார் கூறியதாவது:
நடிகைகள் ராகினி திவேதியும், சஞ்சனா கல்ராணியும் கைதான நாளில் இருந்து விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர். இருவருக்கும் போதைப் பொருள் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதை மறைக்க, நிறைய தந்திரங்களை கையாள்கின்றனர்.
இருவரும் மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்காமல் முதலில் சண்டை போட்டனர். பின்னர் ரத்தம், சிறுநீர், முடி ஆகியவற்றின் மாதிரிகளை கொடுக்காமல் குளறுபடி வேலைகளில் ஈடுபட்டனர். அதிலும் ராகினி திவேதி சிறுநீர் மாதிரியை கொடுக்கும் போது அதில் தண்ணீர் கலந்து கொடுத்தார். இதன் மூலம் உடலின் வெப்ப நிலையை குறைக்க முயற்சித்துள்ளார்.
ஆனால், சிறுநீரை பரிசோதித்த மருத்துவர்கள் தண்ணீர் ஊற்றி அதன் தன்மையை கெடுத்திருப்பதை கண்டறிந்தனர். பின்னர் ராகினியை அதிகாரிகள் எச்சரித்த பின்னர் 3 மணி நேரம் கழித்து, சிறுநீர் மாதிரியை வழங்கினார். இதே போல சஞ்சனாவும் சிறுநீர் மாதிரி வழங்காமல் 4 மணி நேரம் போலீஸாரை காக்க வைத்தார். இவ்வாறு குற்றப்பிரிவு போலீஸார் கூறினர்.
அமலாக்கத் துறை வழக்கு
போதைப் பொருள் வழக்கில் கைதானவர்கள் வெளிநாட்டு பண மோசடி, சொத்துக் குவிப்பு ஆகிவற்றில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து கடந்த 2 நாட்களாக விரேன் கன்னா, ரவி ஷங்கர், ராகுல் ஷெட்டி, ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT