Published : 07 Sep 2020 01:42 PM
Last Updated : 07 Sep 2020 01:42 PM

போதைப் பொருள் விவகாரம்: மேக்னா ராஜிடம் மன்னிப்பு கோரியுள்ள இந்திரஜித் லங்கேஷ்

பெங்களூரு

கன்னட திரையுலகில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக இருக்கும் இந்திரஜித் லங்கேஷ், மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி, நடிகை மேக்னா ராஜிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

கன்னடத் திரைத்துறையில் போதைப் பொருள் பயன்பாடு பற்றிப் பேசி சர்ச்சையைக் கிளப்பியவர் இந்திரஜித் லங்கேஷ். மத்தியக் குற்றப் பிரிவு காவல்துறை தரப்பும் இவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளது. போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை ராகினி உள்ளிட்ட இன்னும் சிலரைக் கைதும் செய்துள்ளது.

சமீபத்தில், இளம் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா காலமானார். இந்த மரணம் குறித்தும் லங்கேஷ் கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால் லங்கேஷ் கூறிய விஷயங்களால் தானும், தங்களது குடும்பமும் துக்கத்தில் இருக்கும் வேளையில், அதிகமாகக் காயப்படுத்தியுள்ளன என்றும், லங்கேஷ் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி மேக்னா ராஜ், கன்னட திரைப்பட சங்கத்துக்குக் கடிதம் எழுதினார். தற்போது லங்கேஷ் மன்னிப்பு கோரியுள்ளார்.

"எனது வார்த்தைகளால் காயப்படுத்தியிருந்தால் மேக்னா ராஜுக்கும், அவரது குடும்பத்துக்கும் எனது மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன். நான் சொன்னதைத் திரும்பப் பெறுகிறேன். இந்த மன்னிப்பு கேட்டதால் நான் உயர்ந்தோ, தாழ்ந்தோ போவதில்லை.

சிரஞ்சீவி சர்ஜாவுக்கு போதை மருந்து விவகாரத்தில் தொடர்புள்ளது என்று நான் சொல்லவில்லை. 37 வயதில் ஒரு இளம் நடிகர் இறக்கும் போது, போஸ்ட்மார்ட்டம் செய்திருக்க வேண்டும் என்றே சொன்னேன். துக்கத்திலிருக்கும் குடும்பத்தை எனது வார்த்தைகளைக் காயப்படுத்தும் என சங்கத்தின் தலைவர் என்னிடம் சொன்னதுமே நான் எனது வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுவிட்டேன்.

அவர்களின் நற்பெயரைக் கெடுக்கும் எண்ணம் எனக்கு இல்லை. அவரது திடீர் மரணம் எனக்கும் வலியைத் தந்தது. மேக்னா மற்றும் சர்ஜாவின் குடும்பங்கள் திரைத்துறைக்கு மிகப்பெரிய அளவில் பங்காற்றியுள்ளன.

போதை மருந்து விவகாரத்தில் நான் ஒட்டுமொத்த துறையையும் குற்றம் சாட்டவில்லை. கன்னட திரைத்துறையைச் சேர்ந்தவர்களில் இரண்டு சதவீதத்துக்கும் குறைவானவர்களே இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம். இதை நாம் இணைந்து எதிர்க்கும் நேரமிது. திரைத்துறையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதும் எனக்குக் கடினமாக உள்ளது. ஆனால் தொடர்ந்து நான் குரல் கொடுப்பேன்" என்று லங்கேஷ் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x