Published : 07 Sep 2020 11:04 AM
Last Updated : 07 Sep 2020 11:04 AM
தமிழில் 'வாட்ச்மேன்', 'கோமாளி', 'பப்பி' உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் கன்னட நடிகை சம்யுக்தா. சமீபத்தில் இவரும் இவர் நண்பர்களும் பூங்காவில் உடற்பயிற்சி செய்யச் சென்றுள்ளனர். இவர்கள் உடற்பயிற்சி செய்வதைப் பார்த்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவிதா ரெட்டி என்பவர், இவர்களை நோக்கித் திட்டியபடியே, நீங்கள் கவர்ச்சி நடனமாடுபவர்களா என்று கேட்டுத் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. கவிதா ரெட்டியுடன் அங்கிருந்து இன்னும் சிலரும் தன்னையும் தன் தோழிகளையும் தகாத முறையில் திட்டி இழிவுபடுத்தியதாகவும் சம்யுக்தா ஹெக்டே தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
சம்யுக்தாவும் அவரது நண்பர்களும் பூங்காவில் இருந்தவர்களைத் தொந்தரவு செய்யும் வகையில் சப்தமாக இசை வைத்து உடற்பயிற்சி செய்ததாகவும், அதைக் கேட்டபோது தன்னை அசிங்கமாகப் பேசிய பிறகுதான் கடுமையாக நடந்து கொண்டேன் என்றும் கவிதா ரெட்டி குற்றம்சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக இரு தரப்பினருமே பெங்களூரு போலீஸாரிடம் புகாரளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சம்யுக்தா ஹெக்டே மற்றும் அவருடைய தோழிகளிடமும் தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கவிதா ரெட்டி கூறியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள காணொளியில் கவிதா ரெட்டி கூறியிருப்பதாவது:
செப்டம்பர் 4 அன்று நடந்த அந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்துக்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். சம்யுக்தாவையோ அவரது தோழிகளையோ நான் தாக்கவில்லை. எனினும் நான் நிதானத்தை இழந்து கோபப்பட்டதற்காக நான் அவர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அடுத்தவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை எப்போதும் எதிர்த்தே வந்திருக்கிறேன். அது போன்ற ஆக்ரோஷமான வார்த்தைகளை நான் பயன்படுத்தினேன் என்பதை என்னால் நினைத்து பார்க்கமுடியவில்லை. நிச்சயமாக அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது. ஒரு பொறுப்புள்ள குடிமகளாகவும், முற்போக்கு சிந்தனையுள்ள பெண்ணாகவும் சம்யுக்தாவிடமுமும் அவரது தோழிகளிடமும் நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT