கர்ணம் மல்லேஸ்வரி பயோபிக்கில் ரகுல் ப்ரீத் சிங்?

கர்ணம் மல்லேஸ்வரி பயோபிக்கில் ரகுல் ப்ரீத் சிங்?

Published on

தெலுங்கில் உருவாகவுள்ள கர்ணம் மல்லேஸ்வரி பயோபிக்கில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த கர்ணம் மல்லேஸ்வரி, இந்தியாவின் சார்பில் பெண்கள் பளு தூக்குதல் பிரிவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றவர். ஒலிம்பிக்குக்கு முன்பே இரண்டு முறை பளு தூக்குதலில் உலக சாம்பியனாகத் திகழ்ந்தவர். 25-க்கும் அதிகமான சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார். இதில் 11 தங்கப் பதக்கங்களும் அடங்கும்.

அவரது பிறந்த நாளான ஜூன் 1-ம் தேதி, அவருடைய வாழ்க்கைக் கதை படமாக உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. கோனா வெங்கட் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்க, இந்தப் படத்தை சஞ்சனா ரெட்டி இயக்கவுள்ளார். இதன் பணிகள் நடைபெற்று வந்தன. ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தயாராகவுள்ளது.

இதில் கர்ணம் மல்லேஸ்வரியாக நடிக்கவுள்ளது யார் என்ற கேள்வி நீண்ட நாட்களாக எழுந்து வந்தது. முதலில் நித்யா மேனன் மற்றும் டாப்ஸி ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. ஆனால், இருவருமே இதற்கு மறுப்பு தெரிவித்தார்கள்.

தற்போது கர்ணம் மல்லேஸ்வரியாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் தீவிரமாக இயங்குபவர் ரகுல் ப்ரீத் சிங். ஆகையால் இந்த பயோபிக்கில் அவர் நடிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in