Published : 20 Jul 2020 08:15 PM
Last Updated : 20 Jul 2020 08:15 PM
தங்கக் கடத்தலில் கிடைத்த பணத்தின் மூலம் மலையாளத் திரைப்படத் துறையில் ஒருவர் ஆதாயம் அடைந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டதாகக் கண்டுபிடித்து சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். தங்கத்தை வாங்க வந்திருந்த தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித் குமாரை சுங்கத்துறையினர் கைது செய்தனர். அதன்பின் இந்த வழக்கு தேசிய விசாரணை முகமைக்கு மாற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சரித் குமார் அளித்த தகவலின் படி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்கெனவே வேலை செய்தவரும், தற்போது கேரள தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிவந்த ஸ்வப்னா சுரேஷ், அவரின் நண்பர் சந்தீப் நாயர் இருவரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
தற்போது இதுகுறித்து நடந்து வரும் விசாரணையில், கடந்த ஒரு வருடத்தில் ஒருசில முறை தங்கம் கடத்திக் கொண்டு வரப்பட்டதாகவும். இதனால் மலையாளத் திரைத்துறையைச் சேர்ந்த ஒருவர் ஆதாயம் அடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இது இந்த வழக்கில் முக்கியத் தகவலாகப் பார்க்கப்படுகிறது. மேலும் என்ஐஏ சில விமான நிலைய அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தவுள்ளனர்.
ஜெயகோஷ் என்பவரின் வாக்குமூலத்தை என்ஐஏ பெற்றுள்ளது. இவர் ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்தில் காவலில் இருக்கும் கேரள காவல்துறையைச் சேர்ந்தவர். முன்னதாக இவர் காணாமல் போனதாகச் சொல்லப்பட்டது. ஆனால், பின்னர் அவரது வீட்டுக்கு அருகில், மணிக்கட்டு வெட்டப்பட்ட நிலையில் அவர் கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனையில் ஜெயகோஷை அதிகாரிகள் விசாரித்தனர்.
அப்போது, தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கும் தங்கம் இருக்கும் பையைக் கொண்டு வரவே தான் சரித்துடன் சென்றதாகவும், ஆனால் அதில் தங்கம் இருந்தது, ஊடகங்களில் செய்திகள் வந்த பின்புதான் தனக்குத் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். இவரது தொலைபேசியிலிருந்து ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சரித்துக்கு அழைப்புகள் வந்திருப்பதும், சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT