Published : 26 Jun 2020 02:56 PM
Last Updated : 26 Jun 2020 02:56 PM

நான் இனி சுயாதீன இயக்குநர்: 'அங்காமலே டைரீஸ்' இயக்குநர் லிஜோ ஜோஸ் அறிவிப்பு

திருவனந்தபுரம்

நான் இனி சுயாதீன இயக்குநராகச் செயல்படவுள்ளதாகவும், தனக்கு வரும் பணம் அனைத்தையும் மீண்டும் திரைப்படத்திலேயே முதலீடு செய்யவுள்ளதாகவும் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெலிச்சேரி கூறியுள்ளார்.

கேரளத் திரையுலகின் புதுயுக இயக்குநர்களில் முக்கியமானவர் லிஜோ. 'ஆமென்', 'அங்காமலே டைரீஸ்', 'ஈ.மா.யூ', 'ஜல்லிக்கட்டு' என இவர் இயக்கிய படங்கள் ஒவ்வொன்றுமே கேரள சினிமா வரலாற்றில் முக்கியப் படங்கள். சமீபத்தில் பிரபல இயக்குநர் மணிரத்னம், தனக்குப் பிடித்த இயக்குநர்களில் ஒருவராக லிஜோவைக் குறிப்பிட்டிருந்தார்.

வெள்ளிக்கிழமை காலை லிஜோ, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அதிரடி அறிவிப்பு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"எனக்கு சினிமா என்பது பணம் சம்பாதிக்கும் இயந்திரமல்ல. எனது பார்வையை வெளிப்படுத்தும் ஒரு ஊடகம். எனவே இன்றிலிருந்து நான் ஒரு சுயாதீன இயக்குநராக மாறுகிறேன். சினிமாவில் எனக்குக் கிடைக்கும் பணம் அத்தனையையும், மேலும் நல்ல சினிமாவுக்காக மட்டுமே பயன்படுத்துவேன். வேறெதற்காகவும் அல்ல. எங்கு சரி என்று எனக்குப் படுகிறதோ அங்கெல்லாம் எனது திரைப்படத்தைத் திரையிடுவேன். ஏனென்றால் நான் அதை உருவாக்கியவன்.

நாம் ஒரு நோய்த்தொற்று சூழலில் - போர்ச் சூழலில் இருக்கிறோம். வேலைவாய்ப்பு இல்லை, அங்கீகாரம் கிடைக்காத நெருக்கடி, ஏழ்மை, மத ரீதியிலான பதற்றம், வீட்டை அடைய 1000 மைல்கள் நடந்தே செல்லும் மக்கள், மன அழுத்தத்தில் இறந்து போகும் கலைஞர்கள் என ஒரு சூழல்.

எனவே, மக்களுக்கு உந்துதலைத் தர, உயிர்ப்புடன் இருப்பதை உணர்த்த, கலையை உருவாக்க வேண்டிய நேரம். உயிர் வாழத் தேவையான சிறிய நம்பிக்கையை ஏதோ ஒரு வடிவில் அவர்களுக்குத் தர வேண்டும்.

எங்களை வேலை செய்ய வேண்டாம் என்று சொல்லாதீர்கள்.
எங்கள் படைப்புகளைத் தடுக்காதீர்கள்
எங்கள் நேர்மையைச் சந்தேகப்படாதீர்கள்
எங்கள் சுய மரியாதையைக் கேள்வி கேட்காதீர்கள்
உங்களுக்கு மோசமான இழப்பு நேரிடும்
ஏனென்றால் நாங்கள் கலைஞர்கள்!

- லிஜோ ஜோஸ் பெலிச்சேரி, சுயாதீன திரைப்பட இயக்குநர்"

இவ்வாறு லிஜோ தெரிவித்துள்ளார்.

இதனால் இனி லிஜோ, கேரளாவின் திரைப்பட அமைப்புகள், சங்கங்கள் என எதைச் சார்ந்தும் பணியாற்ற மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x