Published : 25 Jun 2020 03:20 PM
Last Updated : 25 Jun 2020 03:20 PM

சத்தமின்றி ஓடிடி தளத்தில் வெளியான முதல் தெலுங்குப் படம்

ராணா தயாரித்துள்ள 'கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா’ தெலுங்குத் திரைப்படம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் 100 நாட்களுக்கும் மேலாகத் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்திய அளவில் எந்தவொரு புதிய படமும் வெளியாகவில்லை. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் எனத் தயாராகி இருக்கும் படங்கள் யாவுமே ஓடிடி வெளியீட்டுக்கு முயன்று வருகின்றன.

இதில் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் சில படங்கள் ஓடிடி வெளியீட்டை உறுதிப்படுத்தின. ஆனால், தெலுங்கில் எந்தவொரு படமுமே ஓடிடி வெளியீட்டுக்கு முன்வரவில்லை. அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள 'நிசப்தம்' ஓடிடி வெளியீட்டுக்குத் திட்டமிடப்பட்டுப் பின்வாங்கியது.

இதனிடையே, தற்போது தெலுங்குத் திரையுலகில் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள 'கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா' திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எந்தவொரு விளம்பரத்தையும் படக்குழு மேற்கொள்ளவில்லை.

நேற்றிரவு (ஜூன் 24) திடீரென்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் படம் இருப்பதைக் கண்டு பயனர்கள் பலரும் சமூக வலைதளத்தில் தெரிவிக்கவே தகவல் பரவியது. அதனைத் தொடர்ந்து படத்தைப் பார்த்து விமர்சனங்கள் வரவே, படக்குழுவினரும் அதற்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

ரவிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா' படத்தில் சித்து, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷீரட் கபூர், ஷாலினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ், வயகாம் 18 மற்றும் சஞ்சய் ரெட்டி மூவரும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x