Published : 04 Jun 2020 12:29 PM
Last Updated : 04 Jun 2020 12:29 PM
பாலிவுட் நடிகை மீரா சோப்ராவை அவதூறாகப் பேசியதற்காகவும், மிரட்டியதற்காகவும் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் மீது ஹைதராபாத் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு நடிகை மீரா சோப்ரா ட்விட்டரில் ரசிகர்களிடம் உரையாடினார். அவர்களின் கேள்விக்குப் பதில் அளித்து வந்தார். அப்போது தான் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகை இல்லை என்றும், தனக்கு மகேஷ் பாபுவைப் பிடிக்கும், அவரது ரசிகை என்றும் ஒரு கேள்விக்குப் பதில் கூறியிருந்தார்.
இதனால் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் மீரா சோப்ராவின் பக்கத்தில் வக்கிரமாக கருத்துப் பதிவிட ஆரம்பித்தனர். மேலும் அவரை மிரட்டியும் ட்வீட் செய்ய ஆரம்பித்தனர். இதனால் மீரா சோப்ரா காவல்துறையிடம் புகார் அளித்தார்.
தனக்கு வந்த அச்சுறுத்தல்களையும், ஆபாச வசவுகளையும் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து ஹைதராபாத் காவல்துறையைக் குறிப்பிட்டு உதவி கேட்டார் மீரா சோப்ரா. ட்விட்டரில் கொடுத்த புகாரின் பேரில், மீரா சோப்ராவை ஆபாசமாகப் பேசி, அச்சுறுத்தியதற்காக ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் மீது சைபர் க்ரைம் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.
காவல்துறை துணை ஆணையர் கேவிஎன் பிரசாத் பேசுகையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 506 (மிரட்டல்), 509 மற்றும் 67 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த ஆபாச வசவுகள் குறித்து தேசிய பெண்கள் ஆணையத்தைக் குறிப்பிட்டும் மீரா சோப்ரா ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அதன் தலைவர் ரேகா சர்மா, தெலங்கானா போலீஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பு எப்போதுமே விட்டுக்கொடுக்கப்படுகிறது. ஆனால் உங்களைப் போன்ற மனிதர்களிடமிருந்துதான் ஆதரவையும், வலிமையையும் பெறுகிறோம் என பெண்கள் ஆணையத்துக்கும், ரேகா சர்மாவுக்கும் நன்றி தெரிவித்து மீரா சோப்ரா ட்வீட் செய்துள்ளார்.
மேலும், மகேஷ் பாபுவின் ரசிகையாக இருப்பது பெரிய குற்றம் என்று தனக்குத் தெரியாது என மகேஷ் பாபுவையும், ஜூனியர் என்.டிஆரையும் குறிப்பிட்டு ட்விட்டரில் பகிர்ந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT