Published : 15 May 2020 08:49 PM
Last Updated : 15 May 2020 08:49 PM
தமிழகத்தைப் போல கேரளாவிலும் திரைப்படங்களின் நேரடி ஓடிடி வெளியீடு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா நெருக்கடி காரணமாக பொதுமக்கள் கூடும் இடங்கள் அத்தனையும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக திரையரங்குகள் மூடப்பட்டு மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலை உருவாகியுள்ளதால் சில தயாரிப்பாளர்கள் ஊரடங்கால் வெளியாக முடியாமல் போன தங்களின் திரைப்படங்களை நேரடியாக டிஜிட்டல் வெளியீடாக ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியிட முனைந்துள்ளனர். இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவரங்கள் கடந்த 2-3 வாரங்களாக செய்திகளாக உலவி வந்தாலும் வெள்ளிக்கிழமை காலை அமேசான் ப்ரைம் தளம் அதிரடியான விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. இதில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் என மொத்தம் 7 படங்கள் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியிடப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. தமிழில் ஜோதிகா நடிக்கும் 'பொன்மகள் வந்தாள்', கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'பெண்குயின்' ஆகிய படங்கள் ப்ரைமில் வெளியாகின்றன.
மலையாளத்தில் ஜெயசூர்யா, அதிதி ராவ் ஹைதரி நடித்திருக்கும் 'சூஃபியும், சுஜாதையும்' என்ற படம் வெளியாகிறது. ஆனால் இப்படி நேரடியாக வெளியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கேரளாவின் திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் லிபர்டி பஷீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
"ஒட்டுமொத்தமாக ஒரு துறை நெருக்கடியைச் சந்திக்கும் போது, ஒரு சிலர் தங்களின் சுயநலத்துக்காக, டிஜிட்டல் வெளியீடு மூலமாக மாற்று சந்தையை உருவாக்குவது சரியல்ல. இப்படி திரையரங்கைத் தாண்டி ஒரு படத்தை வெளியிட வேண்டும் என்று முயற்சித்தால் ஜெயசூர்யா மட்டுமல்ல, பெரிய நடிகர்களும் தடை செய்யப்படுவார்கள்" என்று பஷீர் ஒரு இணையதளத்துக்குக் கொடுத்த பேட்டியில் பேசியுள்ளார்.
முன்னதாக வியாழக்கிழமை அன்று அமிதாப் பச்சனின் 'குலாபோ சிதாபோ' திரைப்படம் ப்ரைமில் நேரடியாக வெளியாவது குறித்து பிரபல மல்டிப்ளெக்ஸ் தரப்பு அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT