Published : 10 May 2020 08:07 PM
Last Updated : 10 May 2020 08:07 PM
சிரஞ்சீவி செய்த உதவியை நினைத்து இப்போது கண்கலங்கி நன்றி தெரிவித்துள்ளார் சரத்குமார்.
கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே இருக்கிறார்கள். தங்களுடைய சமூக வலைதளம் மூலமாக கரோனா தொடர்பான கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். மேலும், நேரலை மூலமாக தொலைகாட்சி, இணையதளங்களுக்கு பேட்டியளித்து வருகிறார்கள்.
அவ்வாறு தெலுங்கு சேனல் ஒன்றின் நேரலை பேட்டியில் சிரஞ்சீவி பற்றிப் பேசும் போது அழுதுவிட்டார் சரத்குமார். அந்தப் பேட்டியில் சிரஞ்சீவியுடனான நட்பு குறித்து சரத்குமார் - ராதிகா இருவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்கு ராதிகா பதிலளித்து முடித்தவுடன், சிரஞ்சீவி உடனான நட்பு குறித்து சரத்குமார் பேசியதாவது:
"சிரஞ்சீவியைப் பற்றிப் பேச மேடைகள் கிடைப்பதில்லை. எனக்கு மிகவும் கஷ்டமான காலகட்டத்தில் உதவி செய்துள்ளார். ஒரு முறை நான் பண ரீதியில் பெரிய பிரச்சினையில் இருந்தேன். அப்போது ஒரு தயாரிப்பாளர், சிரஞ்சீவியின் தேதிகள் வாங்கிக் கொடுங்கள், அவரை வைத்து படம் எடுப்போம். அதன் லாபத்தை உங்களுக்குத் தருகிறேன். உங்கள் பிரச்சினை தீரும் என்றார். சரி என்று நானும் சிரஞ்சீவியை தொலைபேசியில் அழைத்து நேரில் சந்திக்க நேரம் கேட்டேன். அவர் வரச் சொன்னார்.
ஹைதராபாத்தில் ஒரு ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் இருந்தார். அங்குச் சென்று பார்த்து, தனிப்பட்ட முறையில் பேச வேண்டும் என்றேன். அப்போது ஏதோ சண்டைக் காட்சி எடுக்கவிருந்தார்கள். ஆனால் சிரஞ்சீவி இயக்குநரை அழைத்து, 'நான் சரத்குமாரிடம் பேச வேண்டும், நீங்கள் நாளை எடுத்துக் கொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டு என்னை அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். எனக்காக அவர் படப்பிடிப்பை ரத்து செய்ததே ஆச்சரியமாக இருந்தது.
வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவளித்தார். 'என்ன பிரச்சினை' என்று கேட்டார். நான் விஷயத்தைச் சொன்னேன். உங்கள் தேதிகள் வேண்டும் என்று கேட்டேன். நீங்கள் தருவேன் என்று சொன்னால் எனக்கு உபயோகமாக இருக்கும் என்றேன். சரி இப்போது இருக்கும் படத்தை முடித்துவிட்டுத் தருகிறேன் என்றார்.
உங்கள் சம்பளம் என்னவென்று கேட்டேன், (உடனே சிறிது நேரம் அவர் பேசவே இல்லை. கண்கலங்கி அழுதுக் கொண்டே..) "ஏ, எனக்கு சம்பளம் தருகிறாயா? உனக்கே பிரச்சினை என்றாய். எனக்கு எதுவும் வேண்டாம். தேவையில்லை. நான் தேதிகள் தருகிறேன். உன் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து போகும்" என்றார். அப்போது ரொம்பவே எமோஷனலாகி விட்டேன். இன்று அவருக்கு நன்றி கூறுகிறேன்.
'கேங் லீடர்' படம் முடிந்த பிறகு அவருடன் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றேன். அதற்கு அவர், நீ நாயகனாகி விடுவாய் என்றார். அப்படியே நடந்தது. அவருக்கு என்மீது இருந்த நம்பிக்கை, எனக்கு அவர் தந்த ஆதரவு இதையெல்லாம் மறக்க முடியாது"
இவ்வாறு சரத்குமார் பேசினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT