Published : 05 May 2020 09:37 PM
Last Updated : 05 May 2020 09:37 PM
மலையாளத் திரைப்படப் பாடகர்கள் சங்கம், தற்போதைய ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சக இசைக் கலைஞர்களுக்கு உதவுவதற்காக ஃபேஸ்புக்கில் 60 நாட்கள், 60 பாடகர்கள் என்ற முன்னெடுப்பைச் செய்துள்ளது.
கரோனா நெருக்கடியால் திரைத்துறையும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இசைக் கலைஞர்கள், சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக நேரலையிலோ, பதிவு செய்தோ பாடி, தங்கள் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.
மலையாளத் திரைப்படப் பாடகர்கள் சங்கம், இந்த ஊரடங்கால் மேடை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பாடல் பதிவு என அனைத்தும் ரத்தாகி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சக பாடகர்கள், இசைக் கலைஞர்களுக்கு உதவ தனது சமூக வலைதளப் பக்கத்தைப் பயன்படுத்துகிறது. திங்கட்கிழமையிலிருந்து (மே 4) ஆரம்பித்து, தினமும் ஒவ்வொரு பாடகர் என 60 நாட்கள், 60 பாடகர்களின் இசை நிகழ்ச்சியை தனது பக்கத்தில் நேரலையாக ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது.
சங்கத்தின் தலைவர் சுதீப் குமார் இந்த முன்னெடுப்பைத் தொடங்கி வைத்தார். வரும் வாரங்களில் ம்ருதுளா வாரியர், பிரதீப் சோமசுந்தரம், எம்ஜி ஸ்ரீகுமார், ஜ்யோத்ஸ்னா ராதாகிருஷ்ணன், கவளம் ஸ்ரீகுமார், சிதாரா கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பாடகர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.
"எங்கள் சங்கத்தைச் சேர்ந்த பாடகர் ஒருவர் ஒரு ஃபேஸ்புக் குழுவில் நேரலையில் பாடியுள்ளார். அந்தக் குழுவின் அட்மின்கள் அவருக்கு 50 ஆயிரத்தைக் கட்டணமாகக் கொடுத்தனர். அதை அவர் சங்கத்துக்கு நிதியாகத் தந்துவிட்டார். இன்னும் சில பாடகர்களும் கூட எங்கள் சங்கத்துக்கு நிதி கொடுத்துள்ளனர். அப்படி ரூ.2.5 லட்சம் நிதியை நாங்கள் திரட்டினோம். அப்போதுதான் ஃபேஸ்புக்கில் நிகழ்ச்சி நடத்தி, இந்த ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இசைக் கலைஞர்களுக்கு உதவ நிதி திரட்டலாம் என்ற யோசனை எங்களுக்கு வந்தது.
எங்கள் சங்கத்தில் 70 பாடகர்கள் வரை உறுப்பினர்களாக இருக்கின்றனர். இதில் பலருக்கு நிதி உதவி தேவைப்படவில்லை என்றாலும் சிலருக்குத் தேவையாயிருக்கிறது. இசைக் குழுக்களின் உறுப்பினர்களும், முன்னாள் பாடகர்களுக்கும் கூட நாங்கள் நிதியுதவி செய்யவிருக்கிறோம்.
70 பாடகர்களை, 100 பேர் கொண்ட இசைகுழுவோடு சேர்த்து மேடையேற்ற வேண்டும் என்பது எங்கள் கனவு. அது எப்போது சாத்தியமாகும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. இப்போதைக்கு ஒரு நல்ல காரியத்துக்காக 60 பாடகர்களும் அவரவர் வீட்டிலிருந்தே பாடவுள்ளனர்" என்கிறார் சுதீப்.
ஜூலை 2-ம் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி தினமும் இரவு 8 மணிக்கு ஒரு மணிநேரம் நடக்கும். அந்தந்தப் பாடகர்கள் பாடிய பாடல்களோடு சேர்த்து, ரசிகர்கள் கேட்கும் பாடல்களும் பாடப்படும். இந்த நிகழ்ச்சியை கீழ்கண்ட ஃபேஸ்புக் பக்கத்தில் பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT