Published : 25 Apr 2020 10:59 AM
Last Updated : 25 Apr 2020 10:59 AM

ட்விட்டரில் ஒன்றிணைந்து கதையை உருவாக்கும் தெலுங்கு இயக்குநர்கள்

நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். கரோனாவின் தீவிரம் அதிகரித்துக் கொண்டே வருவதால் மே 3-ம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என்று பலரும் சமூக வலைதளங்களின் மூலம் ரசிகர்களோடு நேரலையில் உரையாடியும், கேள்விகளுக்குப் பதில் சொல்லியும் நேரத்தைக் கழித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த் பிப்ரவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘ஹிட்’ தெலுங்குப் படத்தின் இயக்குநர் சைலேஷ் கோலானு தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய வகையான சவால் ஒன்றை அறிமுகப்படுத்தினார். அதில் தான் ஒரு கதையைப் பாதிவரை சொல்லி இன்னொருவரைப் பரிந்துரைக்க வேண்டும், அதில் பரிந்துரைக்கப்பட்டவர் மீதிக் கதையைச் சொல்லவேண்டும். கதை முழுமை பெறும் வரை இந்தச் சவால் தொடரவேண்டும்.

இந்நிலையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு கதையைப் பதிவிட்டுள்ளார் சைலேஷ், விக்னேஷ் என்ற 42 வயது நபர் காலை 5.30 மணிக்கு கண்விழிக்கிறார். அவரது வீட்டிம் பின்புறம் பயங்கரமான ஒரு சத்தம் அவருக்குக் கேட்கிறது. தன் படுக்கையிலிருந்து எழும் விக்னேஷ் நடந்து சென்று தன் வீட்டின் பின்னால் உள்ள கதவைத் திறக்கிறார். இதோடு கதையை நிறுத்தி மீதிக் கதையைச் சொல்லுமாறு ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ பட இயக்குநர் ஸ்வரூப்புக்கு சவால் விடுத்தார் சைலேஷ்.

சவாலை ஏற்றுக் கொண்ட ஸ்வரூப் , ‘விக்னேஷ் தன்னுடைய மனைவி தூரத்திலிருந்து அலறுவதைக் கேட்கிறார். கதவைத் திறந்து பார்க்கும்போது மூன்று பெண்கள் அவரது மனைவியை காருக்குள் இழுத்துச் செல்கிறார்கள். ஒரு பச்சை நிற காரின் பின்பகுதியில் ப்ரீத்தி என்று எழுதப்பட்டிருக்கிறது’ என்று நிறுத்தினார். பின்னர் மீதிக் கதையைத் தொடருமாறு ‘கேர் ஆஃப் கஞ்சரபலேம்’ இயக்குநர் வெங்கடேஷ் மஹாவைப் பரிந்துரைத்தார் ஸ்வரூப்.

இவ்வாறாக இயக்குநர்கள் மோகனகிருஷ்ணா, ஸ்ரீனிவாஸ் அவசராலா, ராகுல் சாங்கிருத்யன், சிவா நிர்வாணா ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக கதையைத் தொடர்ந்தனர்.

இயக்குநர் சைலேஷ் தொடங்கிய இந்த ட்விட்டர் சவால் தெலுங்குத் திரையுலக ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x