Published : 08 Apr 2020 06:05 PM
Last Updated : 08 Apr 2020 06:05 PM
வாழ்க்கையைப் பற்றி ஒரு புதிய பார்வை கிடைத்துள்ளது என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் அச்சத்தால் இந்தியா முழுக்கவே எந்தவொரு படத்தின் படப்பிடிப்புமே நடைபெறவில்லை. இதனால், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். மேலும், தங்களுடைய ரசிகர்கள், பொதுமக்கள் அனைவரையுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள்.
தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் அனைவருமே விழிப்புணர்வு குறித்த வீடியோக்கள், பகிர்வுகள் வெளியிட்டாலும் அனுஷ்கா மட்டும் வெளியிடாமலேயே இருந்தார். தற்போது கரோனா அச்சம் தொடர்பாக முதன்முறையாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
"நாம் பிரிந்திருப்பதாக உணர்கிறோம். ஆனால் பிரிந்திருந்தாலும் ஒற்றுமையுடன் நிற்கிறோம். வாழ்க்கையைப் பற்றி ஒரு புதிய பார்வை கிடைத்துள்ளது. கற்றதை எல்லாம் மறந்து, மீண்டும் புதிதாகக் கற்க வேண்டும். ஒரு புதிய கோணம் கிடைத்துள்ளது. சாத்தியமற்ற விஷயங்கள் சாத்தியப்படும் என்று தோன்றுகின்றன. சாத்தியங்கள் அனைத்தும் மறைந்துவிட்டன.
நாம் ஒரு நொடி சுவாசிக்க எடுத்துக் கொள்ளும்போது, உண்மையாகப் பார்க்க நினைக்கும்போது, நாம் அனைவரும் காலத்தால், புவியியல் எல்லைகளால் பிரிந்திருந்தாலும், நம் மனதின் அன்பால், பிரார்த்தனைகளால் ஒன்றாக இருக்கிறோம் என்பதை உணர்கிறோம். வெளியே சேவை செய்து கொண்டிருக்கும் தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் அன்பு, பிரார்த்தனைகள் மற்றும் நன்றி.
நம்மைப் பாதுகாக்க வேலை செய்யும் ஒவ்வொரு மனிதருக்கும், நம்மைப் பார்த்துக்கொண்டு, நமக்காகப் பிரார்த்தித்து, நாம் குணமடைய உதவும் அனைவருக்கும், நமது நன்றிக்கடனைச் சொல்ல எந்த வார்த்தையும், சொல்லும் போதாது.
ஆனால், இதிலிருந்து நாம் மீண்ட பிறகு, நம் ஒவ்வொருவரின் பங்கு என்ன என்பதைப் புரிந்து, மதிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு. இதில் சிறியது பெரியது கிடையாது. இந்தப் பங்கு, மனிதர்களாக, மனிதத்துக்கு, நம் பூமிக்கு மனிதம் காட்ட வேண்டிய பங்கு".
இவ்வாறு அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT