Published : 06 Apr 2020 09:22 AM
Last Updated : 06 Apr 2020 09:22 AM
அஜய் தேவ்கனின் எளிமையைக் கண்டு ஒட்டுமொத்த படக்குழுவும் ஆச்சரியமடைந்துவிட்டதாக இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.
'பாகுபலி' படத்துக்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. 'பாகுபலி' படத்தைப் போலவே இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தில் தான் முதன் முதலாக பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன் மற்றும் அலியா பட் ஆகியோருடன் பணிபுரிந்துள்ளார் இயக்குநர் ராஜமெளலி. இவர்களுடன் பணிபுரிந்தது தொடர்பாக ராஜமெளலி அளித்துள்ள பேட்டியில், "அலியா பட்டுக்கான காட்சிகளை இன்னும் படமாக்கவில்லை. அவற்றை வரும் மாதத்தில் படமாக்கலாம் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால் கோவிட் 19 வைரஸ் அச்சுறுத்தலால் அது தள்ளிவைக்கப்பட்டுவிட்டது. அவருக்கான காட்சிகளை படமாக்க காத்திருக்கிறோம்.
ஒரு இயக்குநராக அஜய் தேவ்கனுடன் பணிபுரிந்தது எனக்கு மறக்க முடியாத மிகப்பெரிய அனுபவம். நான் அவரை இப்படத்துக்காக தேர்ந்தெடுத்தற்கு காரணம் அவரின் முகத்தில் இருக்கும் நேர்மை. அவர் திரையிலும் சரி திரைக்கு வெளியிலும் சரி எது சொன்னாலும் நாம் நம்பலாம். அது அவரது இதயத்திலிருந்து வெளிவரும். நம்மால் அதை உணரமுடியும். மும்பைக்கு சென்று அவரிடம் ஒரு 20 நிமிடங்கள் கதை சொன்னேன். கதையை கேட்டுவிட்டு எப்போது என் தேதி வேண்டும் என்று கேட்டார். படப்பிடிப்பு தளத்தில் அவரது எளிமையைக் கண்டு ஒட்டுமொத்த படக்குழுவும் ஆச்சர்யத்தில் மூழ்கியது" என்று தெரிவித்துள்ளார் ராஜமெளலி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT