Published : 26 Mar 2020 07:39 PM
Last Updated : 26 Mar 2020 07:39 PM
காவல்துறையினர் கண்மூடித்தனமாக அதிகாரத்தைக் கையிலெடுக்கக்கூடாது என்று ராகுல் ரவீந்திரன் தனது ட்விட்டர் பதிவில் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்
இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 694 பேர் ரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். `13 பேர் மரணமடைந்துள்ளனர். மக்கள் யாரையும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆனால், அதையும் மீறி சில பொதுமக்கள் பைக்குகளில் வெளியே வந்தனர். அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி, வீட்டுக்குச் செல்ல அறிவுறுத்தினார்கள். பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடக்கும் வீடியோ பதிவுகள் இன்று (மார்ச் 26) காலை முதலே ட்விட்டர் தளத்தில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாகப் பாடகி சின்மயியின் கணவரும், நடிகருமான ராகுல் ரவீந்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
"அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரம் கிடைத்தால் இதுதான் பிரச்சினை. இந்த சூழலை அற்புதமாகக் கையாளும் பலர் காவல்துறையில் இருக்கின்றனர். ஆனால் சிலர் மோசமாக இருக்கின்றனர். நாம் அனைவருமே சில சமயங்களில் ஒரு முன்னுதாரணத்தை உருவாக்க ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.
இந்த சூழலின் தீவிரமும், பல முட்டாள்கள் லத்தி பேசினால்தான் புரிந்து கொள்வார்கள் என்றும் எனக்குப் புரிகிறது. ஆனால் இது அனைவருக்குமே கடினமான தருணம். வண்டியில் ஒரு முறை திட்டி, அடித்தாலே பெரும்பாலானவர்கள் வீட்டுக்குத் திரும்பிவிடுவார்கள். ஆனால் சிலர் கெஞ்சும்போதும், மன்னிப்புக் கேட்கும்போதும் கூட சிலர் காவல்துறையினர் அவர்களைத் தொடர்ந்து லத்தியால் அடிக்கும் வீடியோக்கள் பார்ப்பதற்கு நகைச்சுவையாக இல்லை.
பார்க்கும்போது ஒருவித அசவுகரியத்தைத் தருகிறது. சில காவல்துறையினர் கண்மூடித்தனமாக அதிகாரத்தைக் கையிலெடுக்கக்கூடாது. அதுவும் பொருட்களை வீட்டுக்கு வீடு கொண்டு வந்து சேர்க்கும் பணியாளர்கள் போன்றவர்களைத் தாக்கக்கூடாது. அரசாங்கமே இவர்கள் தொடர்ந்து வேலை செய்யலாம் என்று கூறியுள்ளது.
தனிப்பட்ட முறையில் ஒருவரை அவமானப்படுத்துவதற்கும், நகைச்சுவைக்காகவும், மீம்ஸுக்காகவும் இதைப் பகிர்வதை நிறுத்தவும். இது வருத்தமளிக்கிறது. இதுபோன்ற விஷயங்கள் மக்களுடன் தோழமையாக இருக்கும், பொறுப்பான காவல்துறையினர் மீது இன்னும் அதிகமாக மரியாதை வைக்கச் செய்கிறது. அவர்களைக் கடவுள் ஆசிர்வதிக்கட்டும்”.
இவ்வாறு ராகுல் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT