Published : 02 Mar 2020 08:07 PM
Last Updated : 02 Mar 2020 08:07 PM
படத்தின் தலைப்பைக் கூறியதற்காக இயக்குநர் கொரட்டலா சிவாவிடம் மன்னிப்பு கோரினார் சிரஞ்சீவி.
கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அரங்குகள் அமைத்து நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை ராம்சரண் தயாரித்து வருகிறார்.
இதனிடையே நேற்று (பிப்ரவரி 1) காலை ஹைதராபாத்தில் சிரஞ்சீவியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் வெளியிடப்பட்டது. இதில் சிரஞ்சீவியை இயக்கிய இயக்குநர்களுடன் ராம் சரண் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த விழாவில் சிரஞ்சீவி கலந்து கொள்ளவில்லை.
ஆனால், ஹைதராபாத்தில் 'ஓ பிட்ட கதா' என்ற படத்தின் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. முழுக்கப் புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படத்தின் விழாவில் சிறப்பு விருந்தினராக சிரஞ்சீவி கலந்து கொண்டார். தனது புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாமல், சிறு படத்தின் விழாவில் சிரஞ்சீவி கலந்து கொண்டதற்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், 'ஓ பிட்ட கதா' படத்தின் விழாவில் பேசிக் கொண்டிருக்கும்போது தான் நடித்து வரும் படத்தின் பெயர் 'ஆச்சாரியா' என்று சிரஞ்சீவி கூறிவிட்டார். படத்தின் தலைப்பு அதுவரைக்கும் படக்குழுவைத் தவிர யாருக்கும் தெரியாது. தனது வழக்கமான பேச்சுக்கு இடையே மறந்துபோய் சிரஞ்சீவி கூறிவிட்டதால், அதே மேடையிலேயே இயக்குநர் கொரட்டலா சிவாவிடம் மன்னிப்பும் கோரினார்.
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவியின் இந்த இரண்டு செயல்களால் பலரும் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT