Published : 15 Jan 2020 03:22 PM
Last Updated : 15 Jan 2020 03:22 PM
கமர்ஷியல் படங்களை மலிவாக நினைக்கிறார்கள் என்று அல்லு அர்ஜுன் வேதனையுடன் குறிப்பிட்டார்.
த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, முரளி ஷர்மா, ஜெயராம், தபு, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'அலா வைகுந்தபுரம்லோ'. இந்தப் படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், அல்லு அர்ஜுனின் படங்கள் வசூலில் இந்தப் படம் புதிய சாதனையை நிகழ்த்தும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான படங்கள் பலவும் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யூ டியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. அவை மில்லியன் பார்வைகளைக் கடந்து பார்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக "உங்களுடைய படங்களின் இந்தி டப்பிங் யூ டியூப் சேனலில் பல மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?" என்று கேள்விக்கு அல்லு அர்ஜுன், "கமர்ஷியல் படங்கள் பற்றி மலிவாக நினைக்கிறார்கள். அந்த மனநிலை மாற வேண்டும். கலைப் படங்களைப் பார்ப்பது போல கமர்ஷியல் படங்களையும் பார்க்க வேண்டும். கமர்ஷியல் படமோ, கலைப் படமோ, நல்ல படம் பாராட்டப்பட வேண்டும்.
பாலிவுட்டில் அதிகமாக நகர்ப்புற மக்களுக்கான படமாக எடுக்கிறார்கள். அதைத் தாண்டி இருக்கும் மக்களைச் சென்றடைவதில்லை. அவர்களுக்கு நல்ல கமர்ஷியல் படங்களைப் பார்க்கும் ஆவல் இருக்கிறது. அது சுமாரான டப்பிங் வடிவத்தில் வந்தாலும் கூட அதை வரவேற்கத் தயாராக இருக்கிறார்கள். ஒரு கமர்ஷியல் படம் வெற்றி பெறும்போது அதன் மூலம் நிறைய வசூல் வரும். அந்த வசூல் என்பது மக்களின் பாராட்டு தான். ஒரு கிராமப்புற குடும்பம் அப்படியான படத்தைப் பார்த்து திருப்தி அடைவார்கள். அதை விமர்சனம் செய்யத் தோணாது. அந்தத் திருப்தியை உணர்வார்கள். அவ்வளவே.
ஒரு கலைப்படத்தில் நடிக்கும்போது பல விமர்சனங்களில் பாராட்டு வரும். அதைப் பற்றி நிறையப் பேர் பேசுவார்கள். அதிக பாராட்டு கிடைக்கும். அப்போது கமர்ஷியல் படத்தில் நடித்தால் இவ்வளவு பாராட்டு கிடைக்காது என்று நினைப்பார்கள். ஆனால் அவர்களுக்கு கமர்ஷியல் படங்களுக்கும் பாராட்டு கிடைத்துள்ளது. அதை அவர்களால் பார்க்க, உணர முடியவில்லை அவ்வளவே. இதுதான் என் கருத்து” என்று தெரிவித்துள்ளார் அல்லு அர்ஜுன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT