Published : 11 Jan 2020 09:33 PM
Last Updated : 11 Jan 2020 09:33 PM
ராணுவத்தில் அதிகாரியாகப் பணிபுரிகிறார் மகேஷ் பாபு. அவருடைய அணியில் இருக்கும் அஜய் என்ற வீரர், தீவிரவாதிகளுடனான சண்டையில் பலத்த காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அப்போது, ராணுவ அதிகாரிகள் கூட்டத்தில் தலைமை அதிகாரி "கொஞ்ச நாளைக்கு முன்புதான் தன் தங்கைக்குத் திருமணம். ஆகையால், விடுமுறை வேண்டும் என்று கேட்டார் அஜய். அஜய்யின் அண்ணனும் ராணுவத்தில் நாட்டுக்காக உயிரை விட்டவர். இந்தமாதிரியான தருணத்தில் இந்த விஷயத்தைச் சொல்ல வேண்டும். ஆனால், அந்த வீட்டு விஷேசம் முடியுற வரைக்கும் அந்தக் குடும்பத்துடன் இருந்து யாராவது பார்த்துக்கணும்" என்று பேசும்போது, மகேஷ் பாபு முன்னால் வந்து நிற்கிறார். உடனே நீ தான் சரியான ஆள் என்று தலைமை அதிகாரி சொல்லக் கிளம்புகிறார் மகேஷ் பாபு.
கர்னூல் வரும் மகேஷ் பாபு, அஜய் குடும்பத்தினர் நிறைய பிரச்சினையில் இருப்பதைத் தெரிந்து கொள்கிறார். அதற்கு எப்படி உதவி செய்கிறார், வரும் ஆபத்துகளை எப்படித் தடுத்தார், மரணப் படுக்கையில் இருக்கும் அஜய் என்னவானார், வீட்டில் நடக்கவிருந்த திருமணம் என்னவானது என்பதை காமெடி, ஆக்ஷன், மாஸ் காட்சிகள் என எல்லாம் கலந்து கொடுத்த காக்டெயில் படம் 'சரிலெரு நீக்கெவரு'
அனில் ரவிபுடியின் முந்தைய படமான 'எஃப் 2' வெற்றிக்குப் பிறகு இயக்கியுள்ள படம். ராணுவக் காட்சிகள், பிரம்மாண்டமான கோட்டை அரங்கம், ரயில் காட்சிகள், விஜயசாந்தி வீடு, பிரகாஷ் ராஜ் வீடு என இதுக்குள்ளேயே கதையை முடிக்க மெனக்கிடல் செய்திருப்பது தெரிகிறது. குறுகிய நாட்களிலேயே எடுக்க வேண்டும் என நினைத்து ஒரே இடத்திலேயே பல காட்சிகள் நகர்வது போல் எழுதியிருக்கிறார். ஆனால், அது பார்ப்பவர்களைப் போரடிக்காமல் வைத்திருப்பதுதான் ப்ளஸ்.
எப்போதுமே ஒரேவிதமான கதாபாத்திரத் தேர்வு என்று தன் மீது எழுப்பப்படும் விமர்சனத்தை இந்தப் படத்தில் கொஞ்சம் போக்கியுள்ளார் மகேஷ் பாபு. காமெடி, நடனம் என தன் ரசிகர்கள் தன்னிடம் எதிர்பார்ப்பதைச் சரியாகக் கொடுத்திருக்கிறார். அதிலும், நீண்ட நாட்கள் கழித்து காமெடிக் காட்சிகளில் மகேஷ் பாபுவை ரசிக்க முடிகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வெள்ளித்திரையில் விஜயசாந்தி. முக்கியமான ரோல் என்றாலும், அதிக மேக்கப் அப்பட்டமாகத் தெரிகிறது. பிரகாஷ் ராஜ் உடனான அவரின் காட்சிகளை ரசிக்க முடிகிறது. மகேஷ் பாபுவுக்கு ஆதரவாக மாஸான வசனங்கள், க்ளைமாக்ஸ் காட்சியில் ராணுவ வீரர்களைப் பற்றிய வசனம் என கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்.
பிரகாஷ் ராஜ் கதாபாத்திர வடிவமைப்பு முழுமையாக இல்லை. முதல் பாதி முழுக்க சீரியஸான வில்லனாக இருப்பவர், இரண்டாம் பாதியில் மகேஷ் பாபுவுக்குச் சவால் விடும், பின்பு பயப்படும் இறுதியில் மீண்டும் காமெடியனாக மாறும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நாயகியாக ராஷ்மிகா. வழக்கமாக நாயகனைப் பார்த்தவுடனே காதலிக்கும் கதாபாத்திரம்தான் என்றாலும், இவருடைய பேச்சு, பாவனைகள் எல்லாம் 'ஏன் இப்படி நடிச்சிருக்கு' என்பது போலவே இருக்கிறது. அவருடைய எக்ஸ்பிரஷன்ஸை ரசித்து சமூக வலைதளத்தில் கமெண்ட் போடும் ரசிகர்களுக்கு வேண்டுமானால் அந்தக் காட்சிகள் எல்லாம் பிடிக்கலாம். அதே போல் ராஷ்மிகாவின் குடும்பத்தினராக நடித்திருக்கும் ராவ் ரமேஷ், சங்கீதா உள்ளிட்டோர் சில இடங்களில் சிரிக்க வைத்தாலும், ஒரு கட்டத்தில் என்ன ஒரே மாதிரி இருக்கிறது என்று தோன்றுகிறது.
ரத்னவேலுவின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரிய பலம். மகேஷ் பாபுவின் மாஸ் காட்சிகளில் கூட தனது ஒளிப்பதிவுத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். காஷ்மீர், கர்னூல், பொள்ளாச்சி என காட்சிகளுக்குத் தேவையானதை ரசிகர்களுக்குக் கடத்தியிருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத். இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான் என்றால், பின்னணி இசை அதை விட சுமார்தான்.
இந்தப் படத்திலுள்ள பிரச்சினை என்னவென்றால், அரதப் பழசான கதை தான். அடுத்து இது நடக்கும் பாரேன் என்றால், கண்டிப்பாக அது நடக்கும். மேலும், மகேஷ் பாபு நடித்த 'அத்தடு' படத்தையும் சில இடங்களில் ஞாபகப்படுத்துகிறது. முதல் பாதியில் வரும் ரயில் காட்சிகளை அப்படியே நீக்கினாலும், படத்தின் கதையோட்டத்துக்கு எவ்விதமான பாதிப்புமே இல்லை. ஆனால், அதில் தான் காமெடி அதிகம் என்பதால் அது முடியாத காரியம். இரண்டாம் பாதியில் ஒரு கட்டத்தில் மகேஷ் பாபு பேசும் நீளமான வசனத்தோடு படம் முடிந்துவிடும் என நினைப்பீர்கள். அதற்குப் பிறகு ஒரு பாட்டு, சென்டிமென்ட் காட்சி என படம் நீள்கிறது.
இந்தப் படத்தோட பெரிய ப்ளஸ் என்னவென்றால், படம் போரடிக்காமல் போவதுதான். குடும்பத்தோடு போனீர்கள் என்றால் கண்டிப்பாக ரசிக்கலாம். ஆனால், முந்தைய மகேஷ் பாபு படங்கள் போல் ரொம்ப சீரியஸாக இருக்கும் என்று நினைத்துச் சென்றால், கண்டிப்பாக ஏமாற்றமே மிஞ்சும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT