Published : 28 Dec 2019 11:49 AM
Last Updated : 28 Dec 2019 11:49 AM
தெலுங்கில் உருவாகவுள்ள 'பிங்க்' படத்தின் ரீமேக்கில், தாப்ஸி கதாபாத்திரத்தில் நடிக்க நிவேதா தாமஸிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அமிதாப் பச்சன், தாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பிங்க்'. இந்தப் படத்தை, குடியரசுத் தலைவர் தொடங்கி பல்வேறு அரசியல் பிரபலங்கள், திரையுலகப் பிரபலங்கள் என அனைவரும் பாராட்டினர். இதனைத் தொடர்ந்து ‘பிங்க்’ படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையை பெரும் விலை கொடுத்து வாங்கினார் போனி கபூர்.
தமிழில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க, 'நேர்கொண்ட பார்வை' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு, பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ் ரீமேக்கைத் தொடர்ந்து, தெலுங்கு ரீமேக்கிற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அரசியலுக்காகத் திரையுலகில் இருந்து ஒதுங்கிய பவன் கல்யாண், இந்தப் படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்குள் நுழையகிறார். தயாரிப்பாளர் தில் ராஜுவுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளார் போனி கபூர். தற்போது பவன் கல்யாணுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீராம் வேணு இயக்கவுள்ளார்.
இதில், மிக முக்கியமான தாப்ஸி கதாபாத்திரத்தில் நடிக்க நிவேதா தாமஸிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. 'பிங்க்' ரீமேக், பவன் கல்யாணுடன் நடிப்பது என்பதால் அவரும் சந்தோஷமாக சம்மதம் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், படக்குழுவினர் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்தப் படத்தின் இசையமைப்பாளராக எஸ்.தமன் பணிபுரிந்து வருகிறார். 'பிங்க்' தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு, அடுத்த ஆண்டு தொடங்கும் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT