Published : 27 Nov 2019 10:33 AM
Last Updated : 27 Nov 2019 10:33 AM

’அர்ஜுன் ரெட்டி’ சரியா? - பார்வதி vs விஜய் தேவரகொண்டா: இணையத்தில் வைரலாகும் பேச்சு

’அர்ஜுன் ரெட்டி’ படம் தொடர்பாக பார்வதி மற்றும் விஜய் தேவரகொண்டா இருவருக்கும் இடையே கருத்துப் பகிர்வு நடைபெற்றுள்ளது.

இந்தியத் திரையுலகில் அனைத்து மொழிகளில் செயல்பட்டும் வரும் இணையதளம் ஒன்று 'கடந்த 10 ஆண்டுகளில் 100 சிறந்த நடிகர்கள்' என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தி, மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் சிறப்பாக நடித்த நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் தனுஷ், மிஷ்கின், பாபி சிம்ஹா, ஐஸ்வர்யா ராஜேஷ், அஸ்வந்த், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல தமிழ்த் திரையுலக பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றன. இதில் இடம்பெற்ற முக்கியமான நடிகர்களை ஒன்றிணைத்து வீடியோ பேட்டியும் எடுத்து வெளியிட்டுள்ளனர். இதில் அயுஷ்மான் குரானா, பார்வதி, தீபிகா படுகோன், ரன்வீர் சிங், அலியா பட், மனோஜ் பாஜ்பாய், விஜய் தேவரகொண்டா மற்றும் விஜய் சேதுபதி இடம்பெற்றனர்.

இந்தப் பேட்டியின்போது பார்வதியிடம், "ஒரு நடிகர் ஒரு படத்தைத் தேர்ந்தெடுக்கும்போது சமூகப் பொறுப்பு இருக்க வேண்டுமா? நீங்கள், பெண் வெறுப்பு மாதிரியான குறிப்பிட்ட சில விஷயங்கள் இருக்கும் கதைகளில் நடிக்க மாட்டேன் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறீர்கள். உங்களுக்கு இந்த விஷயங்களை மீறி ஒரு கதை பிடித்திருந்தாலும் அதில் நடிக்க மாட்டீர்களா?" என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பார்வதி பதில் கூறியதாவது:

"எனக்கு ஒரு கதை பிடிக்க வேண்டுமென்றால் அதில் கண்டிப்பாக இப்படியான விஷயங்கள் இருக்காது. சமூகத்தில் என்ன நடக்கிறது, பெண் வெறுப்பென்றால் என்ன என்று காட்டுவதற்கும், அதை உயர்வாகச் சித்தரிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அதை எப்படிச் சித்தரிக்கிறார்கள் என்பதைக் கதாசிரியரும், இயக்குநரும்தான் தீர்மானிப்பார்கள். ஒரு ஆண் பெண்ணிடம் வெறுப்பைக் காட்டுகிறான், வன்முறையாக நடந்து கொள்கிறான், அதை நீங்கள் திரையில் காட்டும் விதத்தில் ரசிகர்கள் கை தட்டுகிறார்கள் என்றால் அது அப்படியான நடத்தையைப் போற்றுவதே. அதே நேரத்தில் அந்தக் கதாபாத்திரம் செய்தது சரியா தவறா என்று ரசிகர்களை யோசிக்க வைத்தால் அப்போது நீங்கள் ரசிகரோடு இணைந்து ஒரு உரையாடலை நிகழ்த்துகிறீர்கள். அதுதான் சினிமா.

எனது பதின்ம வயதில் முதலில் சொன்னது போன்ற படங்களைத் திரையரங்கில் பார்த்து நான் நெளிந்தது எனக்கு நினைவில் இருக்கிறது. ஆனால் சுற்றி இருப்பவர்கள் கைதட்டி ரசித்துக்கொண்டிருந்தார்கள். எனக்குக் குழப்பமாக இருந்தது. இதெல்லாம் வழக்கமா, சரியா என்று யோசித்தேன். பின் அது என் நிஜ வாழ்க்கையிலும் பிரதிபலித்தது. நான் ஏன் இதைக் கடுமையாக எதிர்க்கிறேன் என்றால் தனிப்பட்ட முறையில் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். என் உறவில் இப்படியான வன்முறை இருந்தபோது அது வழக்கமானதுதான் என்று நினைத்துப் பல வருடங்கள் தாங்கிக்கொண்டிருந்தேன்.

பல இளம் பெண்களுக்குள் இது போன்ற திரைப்படங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும். ஓர் இருட்டு அரங்கில் இரண்டரை மணி நேரம் உட்கார்ந்து படம் பார்க்கிறீர்கள். கலையை ரசித்து வெளிப்படுத்தும் கூட்டத்துக்குள் இருக்கிறீர்கள். அப்போது பல விஷயங்கள் உங்களையும் அறியாமல் உங்கள் ஆழ் மனதில் தங்கிவிடும். இதற்காகத் திரைப்படங்கள அனைத்தும் அறிவுபூர்வமாக இருக்க வேண்டுமென்றில்லை. கமர்ஷியல் படங்கள், கொண்டாட்டமான படங்கள் இருக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட பாலினத்தை கொச்சைப்படுத்தாமல், உங்கள் காமத்துக்கான காட்சிப்பொருளாக ஆக்காமல் இருக்க வேண்டும். கண்ணியம் வேண்டும்.

நான் பாதிக்கப்பட்டிருப்பதாலும், என்னைச் சுற்றி இது போன்ற விஷயங்களே நிறைய நடந்திருப்பதாலும்தான் பேசுகிறேன். நான் இப்படியான பெண் வெறுப்பைக் காட்டும் கதாபாத்திரங்களை உயர்வாகச் சித்தரிக்கும் படங்களுக்குக் கண்டிப்பாக எதிரானவள் தான். நீங்கள் மோசமான கதாபாத்திரங்களைக் காட்டலாம். ஆனால் அதைச் சரியாகச் சித்தரிக்கும் இயக்குநர், திரைமொழி வேண்டும்.

'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' இரண்டு படங்களிலும் ஆணாதிக்கம் உயர்வாகச் சித்தரிக்கப்பட்டிருந்தது. ஆனால் 'ஜோக்கர்' என்ற ஆங்கிலப் படத்தில் அவன் தவறுகள் செய்யும் நாயகனாக இருந்தாலும் அது உயர்வாகக் காட்டப்படவில்லை. 'ஜோக்கர்' படத்தில் என்ன நடக்கிறது என்ற விஷயங்கள் வெறுமனே காட்டப்பட்டன. எந்த இடத்திலும் அந்த நாயகன் கதாபாத்திரத்தோடு ஒன்றிப்போய், ஆம். நீ அனைவரையும் கொல்ல வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. அந்தக் கதாபாத்திரத்தின் சோகமெல்லாம் நமக்குப் புரிகிறது. ஆனால் அதை அங்கேயே விட்டுவிட்டு, அதைப் பின்பற்ற வேண்டும் என்ற உந்துதல் பெறாமல் வீட்டுக்குச் செல்லலாம்.

அதே நேரத்தில் ஒரு உறவில் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளாமல் அதில் உணர்ச்சி இல்லை என்று சொன்னால் யூடியூபில் அப்படியான வீடியோவுக்குக் கீழே இருக்கும் கருத்துகளைப் பார்க்கும்போது, மக்கள் அதை ஆதரித்துப் பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒரு தவறான விஷயத்தை, பெரும் கூட்டத்துக்குக் கொண்டு செல்கிறீர்கள். இது கூட்டத்தில் வன்முறையைத் தூண்டுவது போலத்தான். அந்த இருண்ட பக்கத்துக்குள் நான் இருக்க விரும்பவில்லை. அதை எப்படிச் சரி செய்ய வேண்டும் என்று கூறும் நீதிபதி நான் அல்ல.

ஒவ்வொரு நாளும் இப்படியான வன்முறையால் பலர் பாதிக்கப்படுகின்றனர். அதனால் நாம் சற்று பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். என்னால் ஒரு இயக்குநர் அப்படியான படம் எடுப்பதைத் தடுக்க முடியாது. ஆனால் என்னால் அதில் பங்கெடுக்காமல் இருக்க முடியும்".

இவ்வாறு பார்வதி தெரிவித்தார்.

இதற்கான பதிலை விஜய் தேவரகொண்டா கூறியதாவது:

"நான் பதில் அளிக்காமல் சில கேள்விகளை மட்டும் முன்வைக்க ஆசைப்படுகிறேன். இந்த உலகம் மோசமாகத்தான் இருக்கிறது. ஒரு நல்ல படம் எடுப்பதால் மட்டும் அதைக் காப்பாற்ற முடியுமா என்று தெரியவில்லை. எல்லாம் இன்னும் கீழ் நோக்கித்தான் சென்று கொண்டிருக்கின்றன என்பதே என் பார்வை. மாசு, தண்ணீர், மக்களின் நடத்தை, கொள்கைகள் என எல்லாவிதத்திலும். திரைப்படத் தேர்வு என்று வரும்போது, எனக்கு இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும். அதனால் நடிக்கிறேன் என்று சொல்லும் நிலையிலும் நான் இல்லை. சமூகப் பொறுப்புடன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலையிலும் இல்லை. என்னைப் பொறுத்தவரை அது அதிகப்படியான பொறுப்பு.

ஒரு படம் மட்டுமே உங்கள் நடத்தையை முடிவு செய்யாது. உங்கள் குடும்பம், வளர்ந்த விதம், பள்ளிப் படிப்பு என பல்வேறு விஷயங்கள் சேர்ந்துதான் ஒரு மனிதரின் நடத்தையை முடிவு செய்யும். ஒரு சினிமா பார்த்ததும், வா இப்படி இருப்போம் என யாரும் சொல்வதில்லை. நடிகர்கள் புகை பிடிக்கும் பல படங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் நான் புகை பிடிக்க மாட்டேன். எனக்குப் பாடல்கள், நடனம் பிடிக்கும். ஆனால் நான் நடனமாடுவதில்லை. எனக்கு ஒரு கதாபாத்திரம் பிடித்திருந்தால் அது எப்படி என எனக்கு நானே நியாயப்படுத்திக் கொள்வேன். இல்லையென்றால் இது சமூகப் பொறுப்போடு இல்லை எனக் காரணங்கள் சொல்லி நிராகரித்துவிடுவேன்.

சினிமா என்று வரும்போது நாம் மொத்தப் பொறுப்பையும் எடுத்துக்கொள்ள முடியாது என நினைக்கிறேன். ஒரு படம் நமது வாழ்க்கைக்கும், நமது கொள்கைகளுக்கும், எண்ணங்களுக்கும் பொருந்த வேண்டும் என்று நாம் நினைக்கிறோம்.

இதைப் பேச எனக்குப் பயமாக இருக்கிறது. இதை நான் நியாயப்படுத்தவில்லை. இதற்கும் வாய்ப்புகள் உண்டு என்றே சொல்ல வருகிறேன். ஒருவேளை (அர்ஜுன் ரெட்டி படத்தில் காட்டியது போல) நிஜத்தில் ஒரு காதல் ஜோடி அப்படி இருக்கலாம். ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு அதே வேளையில் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டு காதலித்துக் கொண்டிருக்கலாம். அதே நேரத்தில் ஒருவர் குழந்தையாக இருக்கும்போது அவரது பெற்றோர் சண்டையிட்டிருக்கலாம். அவர் 'அர்ஜுன் ரெட்டி' பார்க்கும்போது அவருக்குப் பயம் ஏற்படலாம். ஆனால் நான் முன்னால் சொன்னது போல ஒரு ஜோடி இருந்தால் அவர்களுக்குப் படம் பிடிக்கும்.

எல்லோருடைய தனிப்பட்ட வாழ்க்கைக்காகவும் ஒரு இயக்குநர் படம் எடுக்க முடியாது. ஒரு இயக்குநர் அவர் உண்மையாக நம்பும் ஒரு விஷயத்தைப் படமாக எடுக்கிறார். அது எனக்கும் புரிந்தது. அதனால்தான் நான் ’அர்ஜுன் ரெட்டி’யில் நடித்தேன்”.

இவ்வாறு விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

'அர்ஜுன் ரெட்டி' திரைப்படம் இந்தியத் திரையுலகில் பலராலும் பாராட்டப்பட்ட திரைப்படம். இதற்கு பார்வதி தெரிவித்துள்ள கருத்துகளுக்கு இணையத்தில் பெண்கள் தரப்பில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x