Published : 24 Nov 2019 05:41 PM
Last Updated : 24 Nov 2019 05:41 PM
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு தாப்ஸி அளித்த பதிலுக்கு இணையத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகிறன.
கோவாவில் 50-வது சர்வதேச திரைப்பட விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதன் தொடக்கவிழாவில் மத்திய அமைச்சர்களுடன் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், இயக்குநர் கரண் ஜோஹர் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவில் 'Women in Lead' என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தாப்ஸி கலந்து கொண்டார். பல்வேறு கேள்விகளுக்குத் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் பதிலளித்து வந்த தாப்ஸியை, பத்திரிகையாளர் ஒருவர் இடைமறித்தார்.
"இந்தியில் பதிலளியுங்கள்" என்று பத்திரிகையாளர் கேட்க, அதற்கு தாப்ஸி "இங்கிருக்கும் அனைவருக்கும் இந்தி புரியுமா" என்று அங்கிருந்த அனைவரையும் பார்த்து கேள்வி எழுப்பினார். அங்கிருப்பவர்களும் ஆங்கிலத்தில் பேசுவதையே விரும்பினார்கள்.
ஆனால், கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் மீண்டும் "நீங்கள் இந்தியில் பதிலளிக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் பாலிவுட் நடிகை" என்று தெரிவித்தார். இதற்கு, "நான் தமிழிலும், தெலுங்கிலும் கூட நாயகி தான். உங்களிடம் தமிழில் பேசட்டுமா" என்று கொஞ்சம் காட்டமாகக் கேள்வி எழுப்பினார் தாப்ஸி.
இந்தப் பதிலுக்கு ரசிகர்கள் அனைவருமே ஆதரவு தெரிவிக்க, பத்திரிகையாளர் அமர்ந்தார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வெளியிடப்பட்டது. பலருமே தாப்ஸியின் துணிச்சலுக்கு தங்களுடைய ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள். அதே வேளையில், இந்தப் பதில் பாலிவுட் ரசிகர்களிடையே போதிய வரவேற்பைப் பெறவில்லை.
தாப்ஸியின் பதிலுக்குப் பலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்தப் பதிவுகளை #TaapseeOnFire என்ற ஹேஷ்டேக்கில் காணலாம். இந்த ஹேஷ்டேக் ட்விட்டர் பக்கத்தில் இந்தியளவில் ட்ரெண்ட்டாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT