Published : 28 Oct 2019 03:06 PM
Last Updated : 28 Oct 2019 03:06 PM

மஞ்சு வாரியர் புகார்: இயக்குநர் ஸ்ரீகுமார் மேனனை விசாரணைக்காக போலீஸ் அழைப்பு?

திருவனந்தபுரம்,

ஸ்ரீகுமார் தன்னை மிரட்டி, அவதூறு பரப்புகிறார் என்ற மஞ்சு வாரியர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் தொடர்பாக கேரளா போலீஸ் இயக்குநர் ஸ்ரீகுமார் மேனனை விசாரணைக்கு அழைக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் தகவல்களையடுத்து ஸ்ரீகுமார் கைது சாத்தியத்தை உணர்ந்து அதற்கு எதிராக சட்டப் பாதுகாப்பு கோரும் முயற்சியில் உள்ளதாகவும் தெரிகிறது.

மஞ்சு வாரியர் புகாரின் அடிப்படையில் கடந்த வாரம் திருச்சூர் கிழக்கு டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

அதாவது தன்னை சமூகவலைத்தளங்களில் பின் தொடர்ந்து கண்காணிப்பது, தன் புகழைக் கெடுப்பதற்கான வேலைகள், மஞ்சு வாரியரை மிரட்டுவது, பெண்ணின் மாண்புக்கு களங்கம் கற்பிப்பது போன்ற குற்றச்சாட்டுகளுடன் ஸ்ரீகுமார் மேனன் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

மலையாளத் திரையுலகில் பெண்களுக்கான பாதுகாப்பு விவகாரம் சிலகாலங்களாகவே கவன ஈர்ப்பைப் பெற தற்போது ஸ்ரீகுமார் மேனன் விவகாரம் அதிக சமூக கவனத்தை ஈர்த்துள்ளது.

சினிமாவிலிருந்து 14 ஆண்டுகாலம் விலகியிருந்த மஞ்சு வாரியர் 2013-ல் ஸ்ரீகுமார் மேனன் இயக்கிய விளம்பரப்படங்களில் அமிதாப் பச்சனுடன் நடித்து வந்தார். விளம்பரப்படங்கள் திரைப்படங்களில் நடிப்பதற்கான பூர்வாங்கமாக இருக்கும் என்று மஞ்சு வாரியர் கருதினார், இதனையடுத்து ஸ்ரீகுமார் மேனன் இயக்கத்தில் மோகன் லாலுடன் மஞ்சு வாரியர் ‘ஒடியன்’ படத்தில் நடித்தார். இந்தப் படத்தின் போதுதான் ஷூட்டிங்கிலேயே தன்னை இயக்குநர் கடும் சொற்களால் வசைபாடியதாக பிரச்சினை எழுந்தது. தன்னுடைய அறக்கட்டளை ஒன்றுடன் ஸ்ரீகுமார் நிறுவனம் வைத்திருந்த ஒப்பந்தத்தையும் மஞ்சு வாரியர் ரத்து செய்தார்.

இந்நிலையில் தான் கையெழுத்திட்டு கொடுத்த ஆவணங்கள், தொகை பூர்த்தி செய்யப்படாத காசோலைகள் ஆகியவற்றைக் கொண்டு தன்னை நிர்கதியாக்கி விடுவார் என்று மஞ்சு வாரியர் பயந்து புகார் எழுப்பியதாக செய்திகள் வெளியாகின.

இதனையடுத்து இயக்குநர் ஸ்ரீகுமார் தன் விளக்கத்தில், “மஞ்சு அவரது வீட்டை விட்டு வெளியேறியபோது அவரது வங்கிக் கணக்கில் ரூ.1500 ரூபாய் தான் இருந்தது. அவர் கவலையிலிருந்தார். அந்த நேரத்தில் நான் அவரது முதல் விளம்பரப் படப்பிடிப்புக்காக ரூ.25 லட்சத்துக்கான காசோலையைத் தந்தேன். நான் மட்டும்தான் உங்களுக்கு ஆதரவு தந்தேன் என்பதை மறந்துவிட்டீர்களா? எனது எதிரிகள் இன்று உங்கள் நண்பர்களாகிவிட்டார்கள். இன்னமும் அவர்களுக்கு என் மீது காழ்ப்புணர்ச்சி இருக்கிறது.

நான் சாதாரண குடிமகன். மஞ்சு வாரியரின் புகார் குறித்து ஊடகங்களில்தான் நான் பார்த்துத் தெரிந்து கொண்டேன். விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு தருவேன். எனக்கும் மஞ்சுவுக்கும் தெரிந்த எல்லா உண்மைகளையும் விசாரணை அதிகாரிகளிடம் சொல்வேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x