Published : 16 Sep 2019 07:12 PM
Last Updated : 16 Sep 2019 07:12 PM
ஒரு பிளேட் பிரியாணி ! இதுதான் திருவனந்தபுரத்தில் குறும்படம் எடுக்க நினைத்த ஒரு குழு நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் கொடுத்த சம்பளம்.
பிரியாணி ஃபிலிம்ஸ் என்ற பெயரில் இந்தக் குழு இதுவரை இரண்டு குறும்படங்களை எடுத்துள்ளனர். இரண்டு படங்களையும் இயக்கிய, தயாரித்த பார்த்தன் மோகன் பேசுகையில், "கண்ணில் சினிமா கனவோட நண்பர்கள் நாங்கள் சேர்ந்து படங்கள் பற்றி பேசுவதோடு தான் எல்லாம் ஆரம்பித்தது. பின் திரைக்கதை பற்றி பேச ஆரம்பித்தோம். எங்கள் யாரிடமும் பணம் இல்லாத காரணத்தால், பிரியாணி மட்டுமே சம்பளம் என்று படம் எடுக்கலாம் என்று முடிவு செய்தோம்" என்கிறார்.
இவர்களின் முதல் படம் ’மதம்’ 2017ல் எடுக்கப்பட்டது. அசைவம் சாப்பிடும் ஒருவரின் தேர்வைப் பற்றிய விவாதம் அது. இரண்டாவது படம் ’எல்லாம் ஷெரியாக்கும்’. எளிமையான அரசாங்க வேலை ஒன்று முடிவதற்குள் ஒருவர் எப்படி அலைகழிக்கப்படுகிறார் என்பதே இதன் கதை.
இந்த இரண்டு படங்களிலும் நாயகனாக நடித்த அரவிந்த் என்பவர் அடுத்த படத்தை இயக்குகிறார். இப்படி இவர்களுக்குள் ஒருவர் மாற்றி ஒருவர் நடித்தும், இயக்கியும் குறும்படங்கள் எடுக்க முடிவு செய்துள்ளனர்.
இதில் சம்பந்தப்பட்ட எல்லாருமே வெவேறு துறைகளில் வேலை செய்பவர்கள் என்பதால் ஒரு குறும்படம் ஆரம்பிக்க அதிக நேரம் ஆகிறது என்கிறார்கள். ஆனால் சிறந்த தொழில்முறை திறமைகளுடன் செய்ய வேண்டும் என்பதே இவர்கள் எண்ணம். மலையாள சினிமாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் ராகுல் ராஜும், படத்தொகுப்பாளர் அப்பு பட்டாத்ரியும் இவர்களின் முதல் குறும்படத்தில் பிரியாணி மட்டுமே பெற்றுக்கொண்டு சம்பளம் வாங்காமல் வேலை செய்துள்ளனர்.
"அதிக பணம் செலவழிக்காமலே படம் எடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம். எங்கள் படங்களிலிருந்து நாங்கள் சம்பாதிக்கும் வரை இந்த முறையை கடைபிடிப்போம். அதுவரை பிரியாணி ஃபிலிம்ஸின் நோக்கம், சமூகத்துக்கு தொடர்புடைய, படைப்பாற்றல் மிக்க படங்களை எடுத்து அதை எந்த தளத்திலும் வெளியிடுவதே. எங்கள் படங்களிலிருந்து பணம் வந்தால் அதை பசியுடன் இருப்பவர்களுக்கு பிரியாணி வாங்கித்தர பயன்படுத்துவோம்" என்கிறார் பார்த்தன்.
- சரஸ்வதி நாகராஜன் (தி இந்து, ஆங்கிலம்) | தமிழில்: கா.கி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT