Published : 09 Sep 2019 11:58 AM
Last Updated : 09 Sep 2019 11:58 AM
உங்களுக்கு 'சாஹோ' படம் புரியவில்லை என்றால் மீண்டும் ஒருமுறை பாருங்கள் என்று அப்படத்தின் இயக்குநர் சுஜித் கூறியுள்ளார்.
சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'சாஹோ'. கேங்ஸ்டர் குழுக்களுக்கு இடையில் மோதல் நிகழும்போது அதில் தனி ஒருவனாக இருந்து தன் சாம்ராஜ்ஜியத்தை பிரபாஸ் நிறுவுவதே 'சாஹோ' படத்தின் கதை.
ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ், மந்த்ரா பேடி, மகேஷ் மஞ்ச்ரேக்கர், அருண் விஜய், முரளி சர்மா முதலான மிகப்பெரும் இந்திய நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த படம் ரிலீஸான 4 நாட்களில் ரூ.330 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
வசூலில் பெரும் சாதனை படைத்தாலும் விமர்சன ரீதியாக கிண்டல்களையும், எதிர்மறை கருத்துகளையும் பெற்று வந்தது ’சாஹோ’.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல பிரெஞ்சுப் படமான 'லார்கோ வின்ச்' இயக்குநர் ஜெரோம் சல்லி 'என் கதையைத் திருடினால் தயவுசெய்து ஒழுங்காகத் திருடுங்கள்' என்று 'சாஹோ' படத்தைக் குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். அவரது இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
’சாஹோ’ படம் வெளியானது முதல் இந்த விமர்சனங்களுக்குப் பதில் கூறாமல் மவுனம் காத்து வந்த அப்படத்தின் இயக்குநர் சுஜித் தற்போது இதுகுறித்து வாய் திறந்துள்ளார்.
இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்து பேட்டியில் இயக்குநர் சுஜித் கூறுகையில், '' 'சாஹோ' படத்தைக் காப்பி என்று சொல்பவர்கள் இன்னும் 'லார்கோ வின்ச்' படத்தைப் பார்க்கவில்லை என்று அர்த்தம். உங்களுக்கு 'சாஹோ' படம் புரியவில்லை என்றால் மீண்டும் ஒருமுறை சென்று பாருங்கள். உங்களுக்குப் புரியாத ஒரு விஷயத்தைப் பற்றி எழுதக் கூடாது. படம் இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. பிஹாரிலிருந்து பலர் எனக்குத் தொலைபேசி வாயிலாக வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நீங்கள் பிஹாரில் பிறந்திருந்தால் உங்களுக்கு கோயில் கட்டியிருப்போம் என்று கூட சிலர் கூறினார்கள்” என்றார்.
சுஜித்தின் இந்தப் பேச்சைக் குறிப்பிட்டு “படத்தை ஒருமுறையே பார்க்க முடியவில்லை. இதில் எங்கிருந்து இன்னொரு முறை பார்ப்பது?” என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT