Published : 09 Aug 2019 07:01 PM
Last Updated : 09 Aug 2019 07:01 PM
அம்மாவுக்கு அர்ப்பணிக்கிறேன். விருது எதிர்பார்க்காத ஒன்று என்று 'மஹாநடி' படத்துக்காக தேசிய விருது வென்றுள்ள கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
டெல்லியில் இன்று (ஆகஸ்ட் 9) 66-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 'மஹாநடி' படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார் கீர்த்தி சுரேஷ். இதனால் தென்னிந்தியத் திரையுலக பிரபலங்கள் மற்றும் அவருடைய நண்பர்கள் என பலரும் கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தேசிய விருது வென்றது குறித்து கீர்த்தி சுரேஷ், “ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. என்ன வார்த்தைளில் என் சந்தோஷத்தை விவரிப்பது எனத் தெரியவில்லை. தற்போது அப்பா - அம்மாவுடன் இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு. இருவருக்குமே பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளேன். பலரும் வாழ்த்துகள் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
'மஹாநடி' படத்தில் சின்ன வயதாகவும், பெரிய ஆளுமையாகவும் நடிக்க வேண்டும். ஆகையால் அதற்காக உடம்பெல்லாம் குறைக்கவில்லை. எப்படியிருந்தேனோ அதைவிடக் குண்டாகக் காட்டுவதற்கு மேக்கப் மூலமாக ரொம்பக் கஷ்டப்பட்டோம். நிறைய காட்சிகள் எடுக்கும்போது ரொம்பவே எமோஷனலாக இருந்தது. அப்போது, இதற்கான பலன் கிடைக்கும் என நினைத்தேன். அதற்கு இப்படியொரு விருது கிடைக்கும் என நினைத்துப் பார்க்கவில்லை. நல்லது நடக்கும் என்று மட்டுமே என் எண்ணமாக இருந்தது.
இந்த விருதை என் அம்மாவுக்கு அர்ப்பணிக்கிறேன். ஏனென்றால், அவருக்கு ஒரு தேசிய விருது கிடைக்க வேண்டியதிருந்தது. ஆனால், கிடைக்காமல் போய்விட்டது. எனக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்ததே, அவர் கூறிய தேசிய விருது கிடைக்காமல் போன கதை தான். அதை நினைத்து சின்ன வயதிலிருந்தே அம்மா ரொம்ப வருத்தப்படுகிறார். அவருக்கு அந்த விருதை வாங்கிக் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அதைச் சாதித்து விட்டேன் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த விருதுக்குப் பிறகு அடுத்த வரவுள்ள எனது படங்களை, எப்படிப் பார்ப்பார்கள் என்றெல்லாம் யோசிக்கவில்லை. இந்த தேசிய விருது எதிர்பார்க்காத ஒன்று. இதன் மூலம் பொறுப்பு அதிகரித்துள்ளது என நினைக்கிறேன். இந்த விருதால் என்ன மாற்றங்கள் நிகழும் என்பது சில காலங்கள் போனதால்தான் தெரியும்” என்று தெரிவித்தார் கீர்த்தி சுரேஷ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT