Published : 18 Jul 2015 10:56 AM
Last Updated : 18 Jul 2015 10:56 AM
“சர்வதேச சினிமா சந்தையில் தனித்து நின்று வியாபாரத்தை ஈட்டும் அளவுக்கு நம்மிடம் உள்ள படைப்பாளிகளாலும் பெரிய அளவிலான திரைப்படங்களை கொடுக்க முடியும். சர்வதேச அளவில் இந்திய சினிமாவால் சாதிக்க முடியும் என்பதற்கான தொடக்கப் புள்ளியாகத்தான் ‘பாகுபலி’ திரைப்படம் வந்துள்ளது” என்கிறார் மதிசீலன்.
இவர், சென்னையில் ‘இமேஜ் வென்சர்’ என்ற பெயரில் விஷுவல் எஃபெக்ட்ஸ் அண்ட் அனிமேஷன் ஸ்டுடியோவை நடத்தி, சர்வதேச அளவில் அனிமேஷன் படங்களை விநியோகம் செய்து வருகிறார். சர்வதேச சினிமாவில் நம் திரைப்படங்களின் நிலை தொடங்கி ‘பாகுபலி’ படத்தின் கிராபிக்ஸ், விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகள் குறித்து அவர் பேசியதிலிருந்து…
சர்வதேச சினிமா சந்தையில் இனி நம்மால் எளிதாக கால் ஊன்ற முடியும் என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்?
ஹாலிவுட்டில் 1999-ல் ‘மேட்ரிக்ஸ்’ படம் வெளிவந்தபோது அதன் பட்ஜெட் இந்திய மதிப்புப்படி 250 கோடி ரூபாய். அந்தப்படம் பாக்ஸ் ஆபீஸில் அப்போது ரூ.1,700 கோடிக்கும் மேல் வசூலித்தது. இப்போது ‘ஸ்பைடர்மேன்’, ‘ஜூராசிக் வேர்ல்டு’ படங்களை 100 மில்லியன் டாலர்களில் எடுக்கிறார்கள். விளம்பரத்துக்காக 50 மில்லியன் டாலர் வரை செலவு செய்கிறார்கள். இந்திய ரூபாயின் மதிப்புப்படி ஒரு படத்துக்கு ரூ.600 கோடி முதல் 1,000 கோடி வரைக்கும் செலவு செய்கிறார்கள்.
படம் ரிலீஸான இரண்டா வது, மூன்றாவது வாரங்களிலேயே 3,500 கோடி ரூபாய் முதல் 5,000 கோடி ரூபாய் வரை வியா பாரம் பார்த்துவிடுகிறார்கள். இங்கே தற்போது எடுக்கப்பட்ட ‘பாகுபலி’ படத்தின் பட்ஜெட் ரூ. 250 கோடி வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்படத்தை எப்படியும் ரூ.500 கோடி வரை வியா பாரம் செய்ய முடியும். இப்படி இருக்கும்போது நாமும் ரூ.1,000 கோடி வரை செலவு செய்து சர்வதேச அளவில் நம் தயாரிப்புகளை ரூ.3,500 கோடி வரை வியாபாரம் செய்ய முடியும்.
இந்திய சினிமாவுக்கு அந்தப் பின்னணி இருக்கிறது. நம்மிடம் இருக்கும் ஒரே பிரச்சினை சர்வதேச சினிமா தொடர்பான தகவல்களை அதிகம் தெரிந்துகொள்ளாததுதான். அந்த நிலையை உடைக்க வேண்டும். அதற்கு சர்வதேச வியாபார நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு தயாரிப்பாளர்கள் களம் இறங்க வேண்டும். தயாரிப்பாளர்களின் கூட்டு முயற்சிதான் இதை சாத்தியப்படுத்தும்.
அது என்ன தயாரிப்பாளர்களின் கூட்டு முயற்சி?
அதற்கு உதாரணமாக இங்கே ஒரு தகவலைச் சொல்கிறேன். ஸ்பெயின் நிறுவனத்துடன் இணைந்து நாங்கள் ஒரு அனிமேஷன் படத்தை எடுத்தோம். அவர்கள் 55 சதவீதமும், நாங்கள் 45 சதவீதமும் முதலீடு போட்டு அதற்கான பணிகளை முடித்தோம். அவர்கள் போட்ட 55 சதவீத முதலீட்டுக்கும் அந்த ஊரில் 4 கம்பெனிகள் கூட்டாக சேர்ந்துகொண்டார்கள். இங்கே அப்படி ஒரு சூழல் இல்லை. அதுதான் நம்மிடம் இருக்கும் பிரச்சினை.
ஒரு ஹாலிவுட் படம் வெளியாகும்போது அதை குறைந்தது 10 நிறுவனங்களாவது இணைந்து வெளியே கொண்டு வருகிறது. கிடைக்கும் லாபத்தை சரியாக பிரித்துக்கொள்கிறார்கள். 10 பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய மூதலீட்டுப் படத்தை கொண்டு வந்து, அதை சரியாக விற்பனை செய்தால் அடுத்த 3 ஆண்டுகளில் நம் சினிமா உலகம்தான் உலகின் முன்னணியாக இருக்கும். இதற்கு இயக்குநர்களின் பங்களிப்பும் அதிகம் தேவைப்படுகிறது. இதுபோன்று அதிக தொகையை வைத்து படம் எடுக்கும்போது அதில் மற்ற படங்களின் இன்ஸ்பிரேஷன் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
‘பாகுபலி’ படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதே?
கிளைமாக்ஸ் இல்லாமல் ஒரு படத்தை முடிக்க தனி தைரியம் வேண்டும். அதற்காக நிச்சயம் இயக்குநர் ராஜமௌலியை பாராட்டியே ஆக வேண்டும். இப்படத்தில் நீர்வீழ்ச்சியும், மலையும் பிரம்மாண்டமாக காட்டப்பட்டுள்ளன. அப்படி ஒரு மலை உண்மையில் இல்லை. அதை கற்பனையில் உருவாக்கி அதற்குள் நம்மை இழுத்துச்செல்வது பாராட்டுக்குரியது. போர் காட்சியில் காட்டெருமையுடன் மோதும் காட்சியில் அது ‘சிஜி’ என்பது நன்றாகவே தெரிகிறது. இசை பல இடங்களில் சத்தமாக உள்ளது. டெக்னிக்கலான விஷயம் படத்தின் விஷுவல் எஃபெக்ட். அந்த இடங்களை விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் நிவாஸ் மோகன் சிறப்பாக செய்திருக்கிறார்.
படத்தின் கதைக்களம் பழிவாங்கும் பின்னணியைக் கொண்டது. அதற்கான கதை மேலும் சிறப்பாக இருந்திருந்தால் படம் இன்னும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கும். ஒட்டுமொத்தமாக இந்திய சினிமாவை வெளியே விரிவுபடுத்த நல்ல பிளாட்பார்ம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள படம் இது.
அனிமேஷன் துறையில் உங்கள் பணிகள் எப்படி உள்ளது?
‘பொம்மி அண்ட் பிரண்ட்ஸ்’ என்ற அனிமேஷன் தொடரில் 13 அத்தியாயங்களை எடுத்திருக் கிறோம். ஒவ்வொன்றும் 25 நிமிடங்கள் ஒளிபரப் பாகக் கூடியது. 15 மொழிகளில் உருவாக்கப்பட்டு கிட்டத்தட்ட 90 நாடுகளுக்குப் போய் சேர்ந்த முதல் இந்தியத் தயாரிப்பு இதுதான். இதை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். குழந்தைகளால் அதிகம் விரும்பப்படும் தொடர் வரிசையில் முன்னணித் தயாரிப்பாக இது உருவெடுத்து நிற்கிறது.
இந்தத் தொடர் தற்போது சுட்டி டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சி தரவரிசையில் முதல் இடத்திலும் உள்ளது. இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளம்பர படங்களை எடுத்துள்ளோம். கடந்த 2006-ம் ஆண்டுக்கு பின் எங்கள் நிறுவனத்தை சர்வதேச அளவில் இணைத்துக்கொண்டு பணியை தொடர்கிறோம். சர்வதேச வியாபாரத்தில் காப்பி ரைட்ஸ் முதல் ஒவ்வொரு விஷயமும் ரொம்பவே சவாலானது. ஒவ்வொன்றையும் பொறுமையாக கற்றுக்கொண்டு அவற்றை எதிர்கொள்ள வேண்டும். அதை சரியாக செய்து வருவதாகவே நினைக்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT