Published : 03 Feb 2015 05:50 PM
Last Updated : 03 Feb 2015 05:50 PM

சமூக வலைதள அர்ச்சனை எதிரொலி: அரசிடம் தொகையை திருப்பித் தருகிறார் மோகன்லால்

தேசிய விளையாட்டு போட்டி துவக்க விழாவில் இசை நிகழ்ச்சி நடத்திய தனது குழுவினருக்கு கிடைத்த கடுமையான விமர்சனங்களை அடுத்து, அந்நிகழ்ச்சிக்காக வாங்கிய தொகையை அரசிடமே திருப்பி அளிக்க நடிகர் மோகன்லால் முனவந்துள்ளார்.

கேரளாவில் நடைபெற்ற 35-வது தேசிய விளையாட்டு போட்டியின் துவக்க விழா நிகழ்ச்சிக்கு, நடிகர் மோகன்லாலின் 'லாலிசம்' என்ற இசைக் குழு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

அந்த நிகழ்ச்சியில் படு மோசமாகப் பாடியதாலும், அசல் பாடலை பின்னணியில் ஓடவிட்டு அதற்கு வாயசைத்தது பட்டவர்த்தமாகத் தெரிந்ததாலும், லாலிசம் இசைக் குழுவிற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

சமூக வலைதளங்களில் நடிகர் மோகன்லாலையும், அவரது இசைக்குழுவையும் ரசிகர்கள் பலரும் வசைபாடி பதிவுகளைக் குவிக்க ஆரம்பித்தனர். இதைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சிக்காக தாங்கள் பெற்ற ரூ.1.63 கோடி பணத்தை திரும்பத் தர தயாராக உள்ளதாக அரசிடம் நடிகர் மோகன்லால் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

இந்த மின்னஞ்சலில், "வேறொரு இசைக்குழுவை வைத்து திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சி கடைசி நிமிடத்தில் ரத்தானதால், அரசு லாலிசம் குழுவை பாட அழைத்தது. கடந்த 3 வாரங்களாக நானும் எனது குழுவும் இந்த நிகழ்ச்சிக்காக கடுமையாக உழைத்துள்ளோம். எங்கள் குழுவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்னை மோசமாக பாதித்துள்ளன. வாங்கிய பணத்தைத் திரும்பத் தருவதன் மூலம் இந்த சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என நம்புகிறேன்" என்று மோகன்லால் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட முறையில் தான் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ள மோகன்லால், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், நட்சத்திர பாடகர்களுக்கும் கொடுக்கவே பணம் வாங்கியதாகத் தெரிவித்துள்ளார். இத்துடன், செலவுக்கான ரசீதுகளையும் அவர் இணைத்துள்ளார். அதில் ரூ.46.5 லட்சம் பாடல் ஒத்திகைக்கும், இசைக் கலைஞர்களுக்கும், பாடல் பதிவுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் திருசாஞ்சூர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, மோகன்லால் போன்ற ஒரு கலைஞரை இவ்வாறு நடத்தக்கூடாது என்று கூறினார்.

முன்னதாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த சர்ச்சை குறித்த கேள்வி எழுப்பப்பட்டபோது, இசைக் குழுவை தேர்வு செய்த தொழில்நுட்பக் குழுவினரும், மோகன்லாலும் இந்த சர்ச்சைகளுக்கு பதிலளிப்பார்கள் என்று தெரிவித்தார்.

மேலும், "ஒட்டுமொத்த துவக்க நிகழ்ச்சியும் லாலிசம் நிகழ்ச்சியைப் பற்றியதாக மாறிவிட்டது. விமர்சனங்களும் எழுப்பப்பட்டுள்ளன. கலையை மதிப்பிடும் அளவுக்கு எங்களிடம் நிபுணத்துவம் இல்லை. இது குறித்து பொதுமக்கள் தீர்மானிக்கட்டும். எந்தக் கலை படைப்புக்கும் எதிர்மறையான விமர்சனங்கள் எழும்" என்றார்.

நிகழ்ச்சி குறித்த அமைச்சரின் தனிப்பட்ட கருத்தை கேட்டபோது, "நிகழ்ச்சியை முழுமையாக பார்க்காமல் என்ன கூற முடியும்" என்று பதிலளித்தார். இசைக் குழுவைத் தேர்ந்தெடுத்த தொழில்நுட்பக் குழுவின் தலைவராக செயல்பட்டது இயக்குநர் பிரியதர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x