Published : 05 Jan 2015 02:31 PM
Last Updated : 05 Jan 2015 02:31 PM
தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் அவரது ரசிகர் மன்ற உறுப்பினருக்கு கத்திக் குத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
தெலுங்கு பட நடிகர் பவன் கல்யாணின் புதிய திரைப்படமான 'கோபாலா கோபாலா' படத்தின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் கலந்துகொள்ள அவரது ரசிகர்களுக்கு இலவச அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது.
விழா நடந்த அரங்கில் நுழைய அவரது ரசிகர்மன்ற உறுப்பினர்கள் நுழைவு சீட்டுகளை விநியோகித்தனர். அப்போது அங்கு வந்த ரசிகர் ஒருவர், அவரது நண்பர்கள் சிலருக்கும் அனுமதி சீட்டு வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்ததால் அங்கு மோதல் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த அடையாளம் தெரியாத ரசிகர், நுழைவு சீட்டுகளை விநியோகித்த ஸ்ரீனிவாஸ் என்ற உறுப்பினரை கத்தி போன்ற ஆயுதத்தால் கழுத்தில் அறுத்ததாக மாதாப்பூர் காவல் நிலைய கண்காணிப்பாளர் கே. நரசிம்மலு தெரிவித்தார்.
காயமடைந்த ஸ்ரீனிவாஸ் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தால் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், பதற்றத்தின் நடுவே உறுப்பினரை தாக்கிய மர்ம நபர் தப்பிச் சென்றதாகவும், இந்த வழக்கு தொடர்பாக அவரை காவல்துறையினர் தேடி வருவதாகவும் நரசிம்மலு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT