Published : 31 Aug 2017 07:39 PM
Last Updated : 31 Aug 2017 07:39 PM
காதலைக் கடந்து வர முடியாமல் தன்னைத் தானே சீரழித்துக்கொள்ளும் மருத்துவரின் ரத்தமும் சதையுமான கதையே 'அர்ஜுன் ரெட்டி'.
மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர் விஜய் தேவரகொண்டா. ஜூனியர் மாணவி ஷாலினியைக் காதலிக்கிறார். நாயகியின் அப்பா கோபிநாத் பட் இவர்கள் காதலை எதிர்க்கிறார். இதனால் நிலைகுலைந்து போகும் அர்ஜுன் போதையின் பாதையில் தன்னிலை மறக்கிறார். இந்த சூழலில் ஷாலினிக்கு திருமணம் நிச்சயமாகிறது. அதை அர்ஜுன் எப்படி எதிர்கொள்கிறார், ஷாலினி என்ன ஆகிறார், தன் மருத்துவப் பணியை அர்ஜுன் தொடர முடிகிறதா, வீழ்ச்சியிலிருந்து மீண்டாரா என்பது மீதிக் கதை.
வழக்கமும் பழக்கமுமான எல்லா மொழி சினிமாவிலும் வந்துவிட்ட ஒரு காதல்கதைதான். ஆனால், அதைக் காட்சிகளாலும், திரைக்கதையாலும் புத்துயிர் ஊட்டி காதலின் உன்னதத்தை கவித்துவமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் சந்தீப் வங்கா. தெலுங்கு சினிமாவை அடுத்த கட்ட பாய்ச்சலுக்கும், பரிசோதனை முயற்சிகளுக்கும் அழைத்துச் செல்லும் காரணகர்த்தவாக சந்தீப்பின் பங்களிப்பு சிறப்பாய் அமைந்துள்ளது.
அசாதாரணமான நடிப்பால் அசர வைக்கிறார் விஜய் தேவரகொண்டா. கால்பந்து போட்டியில் வரும் சண்டைக்கு முரட்டுத்தனமாக பதிலடி கொடுப்பது, மெடிக்கல் கேம்ப் அறிவிப்பு என்று சொல்லி தன் காதலியை யாரும் பார்க்கக் கூடாது என எச்சரிக்கை விடுப்பது, கண்ணாடிக் குடுவையை உடைத்த பணிப்பெண்ணை தெரு முனைவரை ஓடி ஓடி விரட்டுவது, பாட்டியின் உடலை யார் பாடி என்று சொல்வதா என்று கோபத்துடன் கொந்தளிப்பது, 'தனிப்பட்ட பகுதியில் தான் நான் ஷாலினிக்கு முத்தம் தந்தேன். அந்த நேரத்தில் அவள் அப்பா வந்தது எப்படி சரியாகும்' என தந்தையிடம் விளக்குவது, 'உன் அக்காவுக்கு மட்டுமில்லை உனக்கும் முத்தம் கொடுத்தேன்னு உன் அப்பா கிட்ட சொல்லு' என முத்தக் காரணத்தை நியாயப்படுத்துவது என கதாநாயகனுக்கான அத்தனை குணநலன்களையும் எளிதில் கைவரப் பெற்றிருக்கிறார்.
விளையாட்டு மைதானத்தில் இன்னொரு மருத்துவக் கல்லூரி மாணவனான அமித்தை அர்ஜுன் ஓட ஓட விரட்டி தாக்குகிறார். இன்னொரு சந்தர்ப்பத்தில் ஷாலினி மீது சாயம் பூசி டீஸ் பண்ணும் அமித்தை அடித்துவிட்டு, இனி ஷாலினியை எப்போதும் தொந்தரவு செய்யக் கூடாது என்று சத்தியம் வாங்கி, அவனுக்கு சிகரெட் பற்ற வைக்கிறார். அப்போதைய உரையாடலில் அழுகையும் காதலுமாகப் பேசும் போது தான் ஒரு பெரும் காதலன் என்பதை நிரூபிக்கிறார். முரட்டுத்தனம், கோபம், அழுகை, காதல் என தன் உணர்வுகளை மிகச் சரியாக கையாளும் அர்ஜுன், 'இன்னொருத்தன் மனைவியா இருந்தாலும் அது சதையும் ரத்தமும்தான். ஆனா, அப்பவும் இப்பவும் அவ என் காதலிதான்' என்று சொல்லும் இடத்தில் அர்ஜுன் கதாபாத்திரம் நிமிர்ந்து நிற்கிறது.
நாயகிக்கான வரையறைக்கு அப்பாற்பட்டவராக எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நடித்திருக்கும் ஷாலினியின் நடிப்பு அதன் இயல்பில் தனித்து நிற்கிறது. டீ குடிக்க வரும்போது நிகழும் பார்வை பரிமாற்றங்கள், எந்த எதிர்ப்பும் இல்லாமல் அர்ஜுனுடன் பயணிப்பது, சாயம் பூசி தனக்கு நேர்ந்த தொந்தரவை அழுகையாக வெளிப்படுத்துவது, பாதுகாப்பு உணர்ந்து அர்ஜுனுக்கு முத்தம் தருவது, அப்பாவால் காதலனுக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்க சமாதான முயற்சியில் கொஞ்சுவது, கெஞ்சுவது, நீண்ட பயணத்துக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது என குறையில்லாமல் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் ஆகச் சிறந்த சிலாகிக்கக்கூடிய, இயல்பான நடிப்பு என்றால் ராகுல் ராமகிருஷ்ணாவின் நடிப்பைச் சொல்லலாம். கலாய்ப்பது, கவுன்டர் கொடுப்பது, நகைச்சுவை என்ற பெயரில் பன்ச் பேசுவது அல்லது பல்பு வாங்குவது என்பதை மட்டுமே செய்யாமல் யதார்த்தமான நண்பனாக கவர்கிறார்.
'காதலிக்க நேரமில்லை' படத்தில் அறிமுகமாகி 'பாமா விஜயம்', 'சிவந்த மண்', 'சாந்தி நிலையம்', 'அதே கண்கள்' உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்த காஞ்சனாவின் மறுவருகை இந்தப் படத்தில் சாத்தியம் ஆகி இருக்கிறது. அர்ஜுனின் பாட்டியாக தேர்ந்த நடிப்பை வழங்கி இருக்கிறார். அர்ஜுனின் செயல்களுக்கு ஆதரவு தருவது, காதலர்களை ஆசிர்வதிப்பது, காதல் குறித்த அர்ஜுனின் எண்ணங்களை அச்சரம் பிசகாமல் மற்றவர்களுக்கு விளக்குவது என அன்பின் பாட்டியாய் மிளிர்கிறார்.
போதையின் பாதையில் உச்சகட்டத்துக்கு சென்ற அர்ஜுனை தடுத்தாட்கொண்ட புவன், அர்ஜுனின் அண்ணனாக வரும் கமல் காமராஜு, ஷாலினியின் தந்தையாக வரும் கோபிநாத் பட், அர்ஜுனின் தந்தையாக வரும் சஞ்சய் ஸ்வரூப் ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.
மங்களூர், டேராடூன் அழகையும், மருத்துவக் கல்லூரியின் சூழலையும் ராஜூவின் கேமரா துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறது. ரதனின் நுட்பமான இசை படத்துக்கு மிகப் பெரிய பலம் சேர்க்கிறது. இரண்டாம் பாதியின் சில இடங்களில் மட்டும் ஷஷாங்க் கத்தரி போட்டிருக்கலாம்.
சந்தீப் வங்கா படம் முழுக்க தன் ஆளுமையை செலுத்தி இருக்கிறார். கதாபாத்திரத் தேர்விலும், அவர்களிடம் நடிப்பின் முழுத் திறமையை வெளிக்கொணர்ந்ததிலும் வியக்க வைக்கிறார். நாயகனின் கதாபாத்திர வடிவமைப்பு சிக்கலானது. அதை மிகச் சரியாகக் கையாண்டிருக்கிறார். தன் அவஸ்தையை இறக்கி வைக்க முடியாமல் அல்லல்படும் நாயகன் ஐஸ்கட்டியின் வழியாக தணிவது, மதுவும் கையுமாகவே மருத்துவப் பணி செய்வது, நர்ஸ் பார்க்கிறார் என்பதற்காக அவர் பக்கம் திரும்பி பேண்ட் ஜிப்பை கழற்றுவதாக சேட்டை செய்வது, ஆப்ரேஷன் முடிந்ததும் மருத்துவ உதவியாளர்கள் தம் பற்றவைப்பது என பதிவு செய்யத் தயங்கும் சங்கதிகளை எந்த சமரசமும் இல்லாமல் பதிவு செய்திருக்கிறார்.
நாயகன் மது அருந்திவிட்டு எப்படி அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற கேள்வி நியாயமானது. அதற்கான பதிலையும், தண்டனையையும் இயக்குநர் நாயகனின் உண்மையான பதில் மூலமாக சொல்லி இருப்பது திரைக்கதை நம்பகத்தன்மை கொண்டதாக அமைகிறது. ஆனால், ஷாலினி கர்ப்பம் குறித்து சொல்லும் விளக்கம் மட்டும் வழக்கமான சினிமாவாகி விடுகிறது. நாயகனின் எண்ணப்படி அது சதையும் ரத்தமும்தான். ஆனால், அவள் என் காதலி என்றபடியே காரணம் அமைந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
இதைத் தவிர்த்துப் பார்த்தாலும் பறந்து பறந்து அடிப்பது, பந்தாடுவது, அநியாயத்துக்கு வலிந்து குத்துப் பாடல்களை திணிப்பது, பன்ச் பேசியே பயமுறுத்துவது என்றில்லாமல் நேர்மையும் உண்மையும் மிகுந்த அசலான காதலை அப்படியே மாறாத் தன்மையுடன் கொடுத்ததில் 'அர்ஜுன் ரெட்டி' தவிர்க்கக் கூடாத சினிமா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT